நாளை மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.. சிஎஸ்கே Vs மும்பை மோதுகிறது!
கொரோனா தொற்று காரணமாக, பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நாளை முதல் தொடங்க உள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் 19 ஆம் தேதியான நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது.
அதாவது, இந்தியாவில் கொரோனா பெருந் தொற்று 2 வது அலையாகப் பரவிக்கொண்டு இருப்பதற்கு மத்தியில் தான், 14 ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி இந்தியாவில் நடத்தப்பட்டது. மொத்தம் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டு, இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியிருந்த நிலையில் தான், முதலில் 2 கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், திடீரென்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், அடுத்தடுத்து 4 வீரர்கள் மற்றும் வீரர்கள் அல்லாத அணி நிர்வாகிகளுக்கும் கொரோனா தொற்றிக்கொண்டதால், வேறு வழியில்லாமல் போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து, “எஞ்சிய 31 ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ கூட்டத்தில் முடிவு” செய்யப்பட்ட நிலையில், நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.
இப்படியாக, கடந்த 4 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடங்குவதால், பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல வீரர்கள் அணியில் இந்த முறை விளையாடாமல் விலகி உள்ளனர். அப்படி, விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில்தான், இரண்டாவது பாதி தொடரின் நாளை நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில், 2 அணிகளுமே ஐபிஎல் களத்தில் சம பலம் பொருந்திய அணிகளாக திகழ்வதால், நாளை போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதனால், நாளை போட்டியானது, களத்தில் அனல் பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு அணிகளும் இது வரையில் நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் சீசனில் 4 முறை இறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
அத்துடன், நடப்பு 2021 சீசனின் முற்பாதியில் சென்னை அணி ஏழு போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி இந்த சீசனில் டெல்லி மற்றும் மும்பை அணிகளிடம் தோல்வியை தழுவியது,
அதே போல், மும்பை அணியும் சென்னையை போலவே சம பலத்துடன் இருக்கிறது. இது வரை 5 முறை ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வென்று உள்ளது. அந்த அணி இது வரை விளையாடியுள்ள 6 ஐபிஎல் பைனலில் ஒரே ஒரு முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்று முறை பிளே ஆப் சுற்றுடன் வெளியேறி உள்ளது. நான்கு முறை லீக் சுற்றுடன் நடையை காட்டியுள்ளது.
மேலும், நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள அந்த அணி, 4 வெற்றிகளை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் உள்ளது.
குறிப்பாக, நாளை நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் இடையிலான போட்டியானது த்ரில்லுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத ஆட்டம் முழுவதும் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.