வாவ்.. ஒன் மேன் ஷோ காட்டிய சாம்சன்! ராஜஸ்தானுக்கு ஒரு வெற்றிகரமான தோல்வி!!
By Aruvi | Galatta | Apr 13, 2021, 10:44 am
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒன் மேன் ஷோ காட்டிய சாம்சன், பயம் என்றால் என்னவென்றே தெரியாமல், அடுத்து நெருக்கி கடைசி பந்து வரை ஆட்டத்தைக் கொண்டுச் சென்று தோல்வி அடைந்தாலும், ராஜஸ்தானுக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியாகவே இந்த போட்டி அமைந்திருந்தது.
14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின.
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி, பஞ்சாப் கிங்ஸ் அணியில், ஓப்பனர்களாக கேஎல் ராகுலும், மயாங்க்கும் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், மயங்க் அகர்வால் 14 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய கிறிஸ் கெயில், ராகுலுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக விளையாடி உயர்த்தினார்.
தொடக்கத்தில், கெயிலும் சந்தித்த முதல் 14 பந்துகளில் 14 ரன்களை மட்டுமே எடுத்திருக்க, பவர்ப்ளே முடிவில், 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப் அணி.
பின்னர், அதிரடியாக விளையாடிய கெயில், சற்று நேரத்திலேயே பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கெயில், 28 பந்துகளில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்கள் என்று, மொத்தம் 40 ரன்களை எடுத்தார். இதன் மூலமாக, ஐபிஎல் போட்டிகளில் 350 சிக்சர்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற மாபெரும்
சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் புதிதாக படைத்து உள்ளார். சிக்சரில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வரும் கெய்ல் நேற்று அடித்த 2 சிக்சர்களால் 351 சிக்சர்களை எடுத்து உள்ளார். இந்த வரிசையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ் 237 சிக்சர்களுடன் 2 வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 216 சிக்சர்களுடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினார். தீபக் ஹூடாவும் அதிரடியாக 20 பந்துகளில் அரை சதம் அடித்து எதிர் அணியை மிரட்டினார்.
இதில், அதிரடியாக விளையாடிய ராகுல், கடைசி இரண்டாவது பந்தை சிக்சருக்கு அனுப்ப முயல, அதனை பவுண்டரி லைனில் நின்ற திவேத்தியா லாவகமாகத் தடுத்து, சூப்பர் கேட்சாக மாற்றினார். இதனால் ராகுலின் 50 பந்துகளில் 91 ரன்களை விளாசி, சதமடிக்கும் முயற்சி தகர்ந்து போனது. அதன் படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி, 221 ரன்கள் குவித்து இருந்தது.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமலாய இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் வீரர்கள் களம் கண்டனர். அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக பென் ஸ்டோக்ஸ், மனன் வோரா களமிறங்கினர். இதில், பென் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் முகம்மது சமி பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து விக்கெட் கீப்பரும் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் களமிறங்கி வான வேடிக்கை காட்டினார். இதற்கிடையில் மற்றொரு தொடக்க வீரராக மனன் வோரா 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்தில் அரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த ஜோஸ் பட்லரும், 25 ரன்னில் அவுட் ஆக, சஞ்சு சாம்சன் மட்டும் ஒருபுறம் பயம் என்றால் என்னவென்றே தெரியாத மாதிரி நங்கூரம் போல், பருத்தி வீரனைப் போல் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி, ரசிகர்களுக்கு வான வேடிக்கை நிகழ்த்தினார்.
அதன்படி, எதிரணியின் பந்து வீச்சை எல்லா திசைகளிலும் அடித்து நொறுக்கினார். இதன் இடையே, தொடர்ந்து சிவம் துபே 23 ரன்களிலும், ரியான் பராக் 25 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், எதைப் பற்றியும் துளியும் கவலைப்படாமல், ஒன் மேன் ஷோ காட்டிய சாம்சன், சதத்தை பூர்த்தி செய்தார்.
இப்படியாக, போட்டியை கடைசி வரை சாம்சன் கொண்டு வந்து வந்தார். போட்டியும் ராஜஸ்தான் பக்கம் வந்தது. இப்படியாக, கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் ராஜஸ்தானுக்குத் தேவை என்ற நிலையில் பந்து வீசவந்தார் அர்ஷ்தீப். முதல் பந்து டாட் பால் ஆன நிலையில், 2 வது பந்து சிங்கிளாக மாறியது.
இதனால், பந்து ஸ்ட்ரைக் மோரீஸிடம் போனது. 3 வது பந்தில் அவர் சிங்கிள் அடிக்க, சாம்சன் ஆன் த ஸ்ட்ரைக் மறுபடியும் வந்து நின்றார். அப்போது, 3 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில், சிக்ஸராக தூக்கி அடித்தார் சாம்சன்.
தொடர்ச்சியாக, 2 பந்துகள், ஐந்து ரன்கள் தேவை என்ற நிலையில், 5 வது பந்தில், ஸ்ட்ரைக்கைத் தக்க வைத்துக் கொள்ள ரன் ஓடாமல் சாம்சன் நின்று விட்டார். மீதம் இருந்த கடைசி பந்தில், 5 ரன்கள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சாம்சன், சிக்ஸராக அடித்தால் மட்டுமே ராஜஸ்தானுக்கு வெற்றி என்றும், அதனை பவுண்டரியாக அடித்தால் சூப்பர் ஓவர் கிடைக்கும் என்றும், எண்ணிய இருந்த நிலையில், அப்படி எதுவும் அடிக்கவில்லை என்றால், பஞ்சாப் அணிக்கு வெற்றி என்ற நிலையிலும், கடைசி பந்தில் வந்து ஆட்டம் இருந்தது. அனைவரும் நெஞ்சம் படபடக்கும் நிலைக்கு வந்துவிட்டது.
ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்பை எகிர வைத்திருந்த இந்த மேட்ச்சின் கடைசி பந்தை எதிர்கொண்ட சாம்சன், சிக்ஸருக்குத் தூக்கி அடித்தார்.
அப்போது, பவுண்டரிலைனில் அந்த பந்து கேட்ச் ஆகி சாம்சன் ஆட்டமிழந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலருக்கும், இதயத்துடிப்பு எகிற அப்படியே நின்று போனது. இதனால், இந்த தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது பஞ்சாப் அணி. ஆனாலும், ராஜஸ்தானுக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியாகவே இது அமைந்திருந்தது.
இந்த வெற்றிகரமான தோல்வியின் மூலம், பஞ்சாப்பின் வெற்றியைப் பற்றி பேசுபவர்களை விட, அதிகமானவர்களைத் தன்னைப் பற்றிப் பேச வைத்து விட்டார் சாம்சன். மேலும், ஐபிஎல்லில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே ஒரு வீரர் சதமடித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.