கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுகிறார் ரவி சாஸ்திரி? கசிந்த தகவல்..
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதவி விலக உள்ளதாகவும்> அவரது முடிவை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் ரவி சாஸ்திரி.
அதே நேரத்தில், இங்கிலாந்தில் உள்ள இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சி அளித்துக்கொண்டிருப்பதால், இலங்கை சென்று விளையாடி இளம் இந்திய அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக புதிய அதாரத்தை எடுத்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்.
இந்த சூழலில் தான், இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் குறித்த விவாதம் பரவலாக எழுந்தது.
அத்துடன், “இந்திய அணியின் நிரந்தர பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வேண்டும்” என்று, சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
மேலும், இந்திய அணிக்கு தற்போது பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடிகிறது. இதனால், அடுத்த முறையும் அவர் தான் பயிற்சியாளராக இருப்பார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், அவருடைய பயிற்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.
அதன் காரணமாக, தற்போது பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை எதிர்த்து, ராகுல் டிராவிட் போட்டியிட வேண்டும்” என்கிற கோரிக்கையும் கடந்த மாதம் பரவலாக எழுந்தது.
முக்கியமாக, வரும் டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடைய உள்ளதால், இவருடன் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் ஆகியோரும் தங்கள் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ரவி சாஸ்திரியின் முடிவை பிசிசிஐ ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவி சாஸ்திரிக்கு பிறகு, ராகுல் திராவிட் பயிற்சியாளருக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர் புது பயிற்சியாளராக தேர்வு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்து உள்ளன.
இது தொடர்பாக ரவிசாஸ்திரி, பாரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் பிசிசிஐயிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், ஐபிஎல் அணியுடன் பயிற்சியாளர் பதவிக்கு பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, ரவிசாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்தியா இரு முறை ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றிருக்கிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிக்கு முன்னேறியது. ஐசிசி உலகக்கோப்பையில் இங்கிலாந்தில் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.