இன்று கடைசி டி20.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்! இலங்கையை வென்று தொடரை கைப்பற்றுமா இந்தியா??
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய இளம் படை, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வென்றுள்ள நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில், முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2 வது 20 ஓவர் போட்டியானது, கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல் ரவுண்டருமான குருணால் பாண்ட்யாவுக்கு திடீரென கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் நேற்று முன் தினம் நடக்க இருந்த 2 வது டி20 கிரிக்கெட் போட்டி ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, இரு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒரு நாள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுனர்.
அத்துடன், அவருடன் நெருக்கமாக இருந்த சில வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால், நேற்றைய தினம் இன்னும் புதிய முகங்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். ஆனாலும், நேற்றைய போட்டியில், இந்திய இளம்படை முற்றிலும் சொதப்பியது என்றே கூறலாம்.
அதாவது, இந்திய அணியில் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சக்காரியா, நிதிஷ் ராணா ஆகியோர் முதல் முறையாக களம் இறங்கினார்கள்.
அதன் படி, முதலில் பேட்டிங்க செய்த இந்திய அணி, இலங்கை வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் ரன் குவிக்க முடியாமல் திணறிப்போனார்கள்.
அதிலும் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்னும், கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்னும் எடுத்தனர். பின்னர் வந்த படிக்கல் 29 ரன் மட்டுமே எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறி சென்ற வண்ணம் இருந்தனர்.
அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாம்சனும், தவறான ஷாட்டால் ஸ்டம்பைப் பறிகொடுத்து, நடையை கட்டினார். பின்னர் வந்த ராணா, புவனேஷ்வர், சைனி ஆகியோர் களம் இறங்கினாலும் சொல்லிக்கொள்ளும் படயாக எதையும் செய்யவில்லை.
இதனால், இந்திய இளம் படையினரால் 20 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இவ்வளவு சொற்ப ரன்களை இலக்காக கொண்ட களம் இறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரர் மினோத் பானுக 36 ரன் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
கடைசி ஓவரில் இலங்கை அணி வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதை அந்த அணி 4 பந்திலேயே எடுத்து இலக்கை எட்டிப் பிடித்து வெற்றியும் பெற்றது.
இதனால், 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், இன்று இரவு கடைசி டி 20 போட்டி நடைபெறுகிறது.
முக்கியமாக, இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது என்னவென்றால், நேற்றையப் போட்டியில் 5 பேட்ஸ்மேன்கள், 6 பவுலர்களுடன் களமிறங்கியது அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
மேலும், டி 20 போட்டியில் இந்திய இளம் படை பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை குவிக்க தவறி விட்டதால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது என்றும் விமர்சிக்கப்பட்டது.
அதே போல், 132 என்ற எளிமையான வெற்றி இலக்கையே, இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்த பிறகும், கடைசி ஓவரில் தான் எட்டிப்பிடித்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
எனினும், இந்திய இளம் படை, அனுபவமற்றவர்களின் அணி என்றாலும், தவிர்த்திருக்கக் கூடிய ஒரு தோல்வியை, வேண்டி விரும்பிப் இந்திய இளம் படை பெற்றுள்ளது என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை அணியில் இன்று பெரிதாக மாற்றம் ஏதும் இருக்காது என்றே கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
இதனால், நேற்றைய போட்டியில் விடுப்பட்ட வீரர்கள் சிலர், இந்தப் போட்டியில் களம் இறக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, இளம் வீரர் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இன்றைய போட்டியில் நிச்சயம் இருப்பார்கள் என்றும், நேற்றைய போட்டிக்கு மாறாக, இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்கள் இன்னும் கூடுதலாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இன்று நடைபெறுவது கடைசி டி20 போட்டி என்பதால், வெற்றிப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய இளம் படை இருக்கி்றது.
அதனால், இன்று நடைபெறும் டி20 போட்டியில் வெற்றி முனைப்புடன் இந்திய இளம் படை களம் இறங்கும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.