தருமபுரியில் கெயில் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசன் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடக மாநிலம் வரை கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாலவாடி பகுதியில் கடந்த வாரம், கெயில் நிறுவன அதிகாரிகள் எரிவாயு குழாய் அமையவுள்ள நிலங்களில் அளவீடு செய்துள்ளனர். இந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் நிறுத்திவிட்டு மீண்டும் அதிகாரிகள் நில அளவீட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்நிலையில் கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்கிற விவசாயி, தந்து விலை நிலத்துக்குச் சென்று அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயி கணேசன் உயிரிழந்த செய்தியைக் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து உயிரிழந்த விவசாயி கணேசன் அவர்களது குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.