IPL தொடரில் களமிறங்கும் முக்கிய வீரர்களுக்கு கொரோனா:முதல் போட்டியிலேயே பெங்களூருக்கு பிரச்சனை..?
By Vijayalakshmi | Galatta | Apr 04, 2021, 12:54 pm
கிரிக்கெட் உலகே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் 14 வது ஐபிஎல் தொடர் வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் போட்டியில் கலந்துக்கொள்ளும் முக்கிய வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் முக்கிய வீரர்கள் இன்றி போட்டியை எப்படி கையாள்வது என்பதில் மிகப்பெரிய சிக்கலில் தவிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் பல மாநிலங்கள் மற்றும் நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.இதனால் ஒரு சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து , இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை அனுமதித்த அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதியை மறுத்தது.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய முன்னாள் இந்திய வீரர்கள் சச்சின், பத்ரிநாத், யூசுப் பதான் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த கொரோனா தொற்றின் தாக்கம் ஐபில் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டுவரும் வீரர்களுக்கு மத்தியிலும் பரவி உள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது.அதன் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தநிலையில் ராயல்சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய வீரரான தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய படிக்கல் தன்னுடைய அற்புதமான ஆட்டத்தால் அணிக்கு மிகப்பெரிய பலமாக திகழ்ந்தார். இந்த ஐபிஎல் தொடரிலும் அவரின் பங்கு பெங்களூர் அணிக்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில் , கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அணியின் பலம் சற்று குறைந்துள்ளது.வரப்போகும் போட்டியில் படிக்கல் இழப்பு அணியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் , கோலியின் அடுத்தக்கட்ட நகர்வு கடினமானதாக இருக்கும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் இங்கிலாந்து இந்தியா இடையேயான சர்வேத போட்டியில் அறிமுகமாகிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் அக்ஷர் பட்டேல் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடுவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.இந்தநிலையில் அக்ஷர் பட்டேலுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரின் இழப்பும் டெல்லி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.