சென்னை போலீஸ் சரகம் 3 ஆக பிரிக்கப்பட்டு, 2 புதிய கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
உலகிலேயே “ஸ்காட்லாந்து யார்ட் காவல் துறைக்கு பிறகு, தமிழக காவல் துறைதான் மிகவும் புகழ்பெற்று திகழ்வதாக” ஒரு சொல்லாடல் உண்டு. இதனை தமிழகத்தில் பலரும் முன் உதாரணம் சொல்லி பேசியது உண்டு.
இப்படியான சூழலில் தான், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக காவல் துறையில் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் தான், “தமிழகத்தில் பழிக்குப்பழி கொலைகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும், கூலிப்படைகள் மூலமாக தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலைகள் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகப் புகார்கள்” எழுந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் கூட பெண் ஒருவர் தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்.
இதனால், “தமிழகத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சென்னை உள்பட மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு” டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அந்த உத்தரவின் படி, களத்தில் இறங்கிய தமிழக காவல் துறை, கடந்த வாரம் தொடர்ந்து 2 நாட்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அதாவது, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்களை அடியோடு ஒழிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசார் கடந்த வாரம் தொடர்ந்து 2 நாட்களில் நள்ளிரவு முதல் ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினார்கள்.
குறிப்பாக, தமிழகம் முழுவதும் கடந்த 23 ஆம் தேதி இரவு முதல் Storming Operation எனப்படும் முற்றுகைச் செயல்பாடு ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் முதல் 36 மணி நேரத்தில் 16,370 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் திருத்தி வாழ்பவர்கள் தவிர மற்றபடி மொத்தம் 2,512 ரவுடிகள் கைது அதிரடியாக செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாகவும் நடத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், மொத்தமாக 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 294 பேர் வழக்குகள் சம்பந்தமாக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவார்.
இவர்கள் மீது பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 பேர் இதில் அடங்குவார்கள். கைதான ரவுடிகளிடம் இருந்து 7 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்கள், கத்திகள் உள்பட மொத்தம் 1117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கர்ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 5 கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கள், டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு அளித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தான், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு காவல் ஆணையர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதாவது, சமீபத்தில் சென்னை காவல் ஆணையரகத்தை 3 ஆக பிரித்து தாம்பரம், ஆவடி ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் 10 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகள், மாநகராட்சி தகுதி பெறுகின்றன.
இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.
அதன் படி தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என தற்போது தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன.
இதில், சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தில் இருக்கிறது.
இந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு காவல் ஆணையர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதன் படி, தாம்பரம் மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி ரவி ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
அதே போல், ஆவடி மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார்.