“சென்னை கலெக்டர் மாற்றத்தின் பின்னணியில் எழிலக அதிகாரிகளின் மெத்தனத்தால் நடந்தது என்றும், இது விசாரிக்காமல் பொத்தம் பொதுவாக நேர்மையாக பணியாற்றும் IAS அதிகாரிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை” என்றும், மிக கடுமையான விமர்சனங்கள் எழுந்து உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரசு ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றதும் திமுக அரசு, பல அதிரடியான செயல்களில் ஈடுபட்டது.
அதில் முக்கியமான ஒன்று, நேர்மையான IAS அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னை சுற்றி வைத்துக்கொண்டது முதல், தலைமைச் செயலாளராக இறையன்புவை நியமித்ததிலிருந்து, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சரியான மற்றும் திறமையான IAS அதிகாரிகளை நியமித்தது வரை, பொது மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த செயல்கள் பொது வெளியில் பொது மக்களிடம் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அதன்படி, குறிப்பிட்ட நேர்மையான IAS அதிகாரிகள் அனைவரும் பல எதிர்ப்புகளையும் மீறி, திறம்படச் செயல்பட்டுக்கொண்டு தான் வருகின்றனர்.
அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட டாக்டர். விஜயாராணி IAS, கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படாமல் இருந்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திச் சாதித்துக் காட்டினார்.
குறிப்பாக, 10 ஆண்டுகளாக சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டா தொடர்பான புகார்களை, தான் சென்னை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டிற்குள், அந்த புகார்களின் எண்ணிக்கையை வெறும் 7 ஆயிரத்திற்குக் கீழாக குறைத்து, அத்தனை புகார்கள் மீதும் அதிரடியான நடவடிக்கை மேற்கொண்டார்.
அத்துடன், பட்டா தொடர்பான புகார்களைத் தீர்க்க வாரம் தோறும் முகாம், வேலை தேடும் இளைஞர்களுக்கும், புதிய தொழில் செய்வோருக்கும் மாதம் ஒரு முறை சிறப்பு முகாம் என்று பல்வேறு விசயங்களை புதிய வடிவத்தில் செயல்பாட்டில் கொண்டு வந்து காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சக உயர் IAS அதிகாரிகளின் பாராட்டையும் பெற்றார். முதலமைச்சரை வைத்தே, 2 முறை நல திட்ட முகாம்களை நடத்திக் காட்டியிருந்தார்.
இடையிடையே, அரசு பெண்கள் விடுதியில் விசிட் அடித்து அந்த மாணவிகளுக்குச் சமைத்துக்கொடுப்பது முதல், சென்னை இரவு நேர விசிட், இலக்கியக் கூட்டங்களில் சிறப்புரை என்று, வலம் வந்துகொண்டிருந்தார்.
இப்படியான சூழலில் தான், கடந்த 25.5.2022 அன்று, சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சண்முகம் IAS வந்தார். இந்த ஆய்வின் போது, “வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய் சேவைகளைப் பெற வந்த பொது மக்களிடம், முதல்வர் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆனால், முதல்வரின் இந்த திடீர் ஆய்வின் போது, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் யாரும் உடன் இல்லை. சாதாரண நிலையில் உள்ள எழிலகத்தில் இருந்து வந்த 2 ஊழியர்கள் தான் இருந்தனர்.
குறிப்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் டாக்டர். விஜயாராணி IAS, மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் என யாருமே வரவில்லை.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் அனைவரும், சென்னை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ் குமாரி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு இருந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டமானது “மகளிர் உரிமைகள், மகளிர் மேம்பாடு, பணிகள் தொடர்பாக, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ் குமாரி தலைமையில் நடைபெற்றிருந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மாவட்ட ஆட்சியர் டாக்டர். விஜயாராணி IAS, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவின் காவல் துறை துணை ஆணையர் சி.சியமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ், சென்னை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சென்னை மாவட்டத்தின் அனைத்து முக்கிய அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
அதற்குக் காரணம், சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டது, இவர்கள் யாருக்கும் தெரியாது என்பதே இதற்குச் சாட்சி.
அதுவும், முதலமைச்சரின் சென்னை ஆய்வு பயணம் என்பது, தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நேரடியாகத் தெரிவிப்பதற்குப் பதிலாக, சென்னை புரோட்டோகால் படி காலம் காலமாக எழிலாகத்தின் ஆணையரிடம் மட்டுமே தெரிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகப் பல ஆண்டுகளாக நடைமுறையிலிருந்து வருகிறது.
அதன்படியே, இந்த முறையும் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு குறித்து, எப்போதும் போல எழிலாகத்தின் ஆணையரிடம் மட்டுமே, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, எழிலாகத்தில் இருந்தோ, முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ளவர்களோ, முதலமைச்சரின் திடீர் ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தின் கூட்டமும் அதே நேரத்தில் நடந்துகொண்டு இருந்தது.
அதே நேரத்தில், அன்று மதியம் 12.25 மணி அளவில் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் என வருகை தந்தபோது, எழிலாக அதிகாரிகளான “நில நிர்வாக ஆணையத்தில் பணி புரியும் இணை ஆணையர் பார்த்திபன், வருவாய் நிர்வாகம் அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆணையர் ராஜ்குமார்” ஆகியோர், மேற்கொண்ட எந்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல், முன்கூட்டியே வந்து காத்திருந்து உள்ளனர்.
இவர்கள் இருவரும், தங்களை “மாவட்ட வருவாய் அலுவலர்” என்பது போல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர் IAS சண்முகத்திடம் கூறியிருக்கிறார்கள். இதனால், கோபம் அடைந்த முதலமைச்சரின் செயலாளர் எஸ்.எஸ்.சண்முகம் IAS, “மாவட்ட வருவாய் அலுவலர் வந்திக்கும் போது, மாவட்ட ஆட்சியர் ஏன் வரவில்லை?” என்பது போல் கோபப்பட்டுப் பேசியதாகவும், இதனைத் தலைமைச் செயலாளர் இறையன்பு கவனத்திற்குக் கொண்டு சென்று, அவரிடம் ஆதங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சென்னை மாவட்ட ஆட்சியர் டாக்டர். விஜயாராணி IAS, மாற்றப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், சென்னை மாவட்ட ஆட்சியர் டாக்டர். விஜயாராணி IAS மாற்றப்பட்ட செய்தியை, அவர் டி.வி.யில் பார்த்து தெரிந்துகொண்டார் என்றும், இது குறித்து தனது தரப்பு விளக்கத்தை முதலமைச்சரின் செயலாளர்களிடம் தெரிவித்த போது, “விசாரிக்காமலேயே தண்டனை கொடுக்கப்பட்டது” தெரிய வந்திருக்கிறது என்றும், கூறப்படுகிறது.
இதனால், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணி IAS மாற்றப்பட்டதற்கு, சில அதிகாரிகள் தற்போது தான் காரணத்தைத் தேடிக்கொண்டு இருப்பதாகவும், தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றுடன், விஜயாராணி IAS மீது நடவடிக்கை எடுத்த சக IAS அதிகாரிகளும், குழப்பத்தில் இருப்பதாகவும், கூறப்படுகிறது.
அது நேரத்தில், சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்ட விவகாரத்தில், எழிலக அதிகாரிகள் மீது தவறு இருப்பது தெரிந்தும், அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், கூறப்படுகிறது.
குறிப்பாக, இலக்கிய வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்றுத் திகழும் மாவட்ட ஆட்சியர் டாக்டர். விஜயாராணி IAS எழுத்துக்கள் பற்றியும், அவரது கவிதைகள் பற்றியும் தலைமைச் செயலாளர் இறையன்பு IAS, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளரான மூத்த IAS அதிகாரி உதயச்சந்திரன், உமாநாத் IAS ஆகியோருக்கும் நன்றாகத் தெரியும் என்றும், ஆனாலும் இவர்களையும் மீறி விஜயாராணி IAS சம்மந்தமே இல்லாமல் தண்டிக்கப்பட்டிருப்பது, சக IAS அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்ட விவகாரம், முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், இதில் உள்ள “உண்மைத் தன்மை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க”, உளவுத்துறைக்கு முதல்வர் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.