ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை விவகாரத்தில் எனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி என நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது 2 டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து, நடித்துள்ள படம், ‘ஜெய்பீம்’. இந்தப் படத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துருவின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.
த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெய்பீம் திரைப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில், அந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
அந்த கேரக்டரின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்ததை அடுத்து இந்தக் காட்சி மாற்றப் பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க .மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜெய்பீம் திரைப்படத்தால் வன்னியர்கள் சமுதாயம் வேதனையும், கொந்தளிப்பும் அடைந்துள்ளதாக 9 கேள்விகளை கேட்டு, நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
நடிகர் சூர்யாவும் தங்கள் புரிதலுக்கு நன்றி என அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி கொடுத்து ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து, நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என மயிலாடுதுறை பா.ம.க. மாவட்ட செயலாளர் கூறியதால் சர்ச்சை எழுந்தது.
மேலும், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி, நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, அமேசான் நிறுவனத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரம் முற்றிக்கொண்டே செல்ல, திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கினர். அவ்வகையில், இயக்குநர் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், கோபி நயினார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், நடிகர்கள் நாசர், சத்யராஜ், கருணாஸ், சித்தார்த், நடிகைகள் ரோகிணி, ஷர்மிளா, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சீமான், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கினர்.
அகில இந்திய நடிகர் சூர்யா தலைமை நற்பணி மன்றம் சார்பில் “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற” என்று சூர்யா அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம் என அறிக்கை வெளியிட்டனர்.
இதுமட்டுமின்றி நடிகர் சூர்யாவின் ரசிகர்கள், “சாதி ஆதிக்கத்தை எதிர்த்து. மக்கள் கலைஞன் சூர்யாவின் பக்கம் துணை நிற்போம்”... ஜெய் பீம்... #westandwithsurya என்ற ஹாஷ்டேக்கையும் ட்விட்டரில் நேற்று முதல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் காரணமாக எழுந்த அச்சுறுத்தலால் நடிகர் சூர்யாவுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சூர்யா, ஜெய்பீம் திரைப்படத்தின் நிஜ செங்கேணியான பார்வதி அம்மாவை நேரில் வரவழைத்து 15 லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கினார்.
இந்நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் எனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி என நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார். அதில், “ஜெய்பீம் திரைப்படத்துக்கு நீங்கள் காட்டிய அன்பு என்னை திக்குமுக்காட வைத்துள்ளது.
இதற்கு முன்னால் இப்படி ஒரு அன்பை நான் பார்த்ததில்லை. எனக்கு நீங்கள் அளித்த நம்பிக்கைக்கு நன்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங்களுடன் நின்றதற்கு இதயம் கனிந்த நன்றி” என்று உருக்கமாக நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us ✊🏼
— Suriya Sivakumar (@Suriya_offl) November 17, 2021