நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், ஆளுநர் இந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாமதம் செய்து வருவதாக, தமிழக அரசும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசுக்கு விரைந்து அனுப்பி வைப்பதுடன், தேநீர் விருந்தை புறக்கணித்தது குறித்து கவர்னர் ஆர்.என். ரவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக கவர்னராக நீங்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து சில மாதங்களாக நமக்கு இடையேயான இதயப்பூர்வமான நல்லுறவினால் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
கவர்னர் அலுவலகத்துக்கு என்று தமிழக அரசு அளிக்க வேண்டிய அனைத்து அலுவலக நடைமுறைகளை செய்து வருகிறது. இந்த காலகட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை எனது அரசு எவ்வளவாக மதிக்கிறது என்பதையும் அவர்களது எண்ணங்களை செயல் வடிவமாக கொண்டு வந்து அமலாக்குவதிலும் நாங்கள் எவ்வளவு முயற்சி எடுக்கிறோம் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
அதனைத்தொடர்ந்து அக்கடிதத்தில் எழுதியது, அதன் அடிப்படையில்தான் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நான் உங்களை சந்தித்தபோது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறிப்பாக ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்திருப்பது குறித்து உங்களுக்கு விளக்கமளித்திருந்தேன். நீட் தேர்வு என்பது தமிழக மக்களின் ஆழ்ந்த கவலையாக உள்ளது.
நீட் குறித்து சமூக ரீதியிலான ஒருமித்த கருத்து ஒரு அரசியல் கருத்தாகவும், சட்டரீதியிலான கருத்தாகவும் உருவாகி உள்ளது. நீட் தேர்வில் விலக்கு என்பது பற்றி சட்டசபையில் கொண்டு வரப்பட்ட மசோதாவும் மக்களின் ஒருமித்த எண்ணத்தை கொண்டு வந்து உருவாக்கப்பட்டதுதான். உங்கள் அலுவலகத்தில் இருந்து அந்த மசோதா சில விளக்கங்களை பெற வேண்டும் என்பதற்காகவும், மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டபோது நாங்கள் அதை எதிர்யிடையான நிலைப்பாடு என்று நினைக்கவில்லை என்றும் முதலவர் எழுதிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, அக்கடிதத்தில் அரசியல் சாசன நிகழ்வாகவும், விரிவாக விவாதித்து அதில் பல விளக்கங்களை கொடுத்து அந்த மசோதாவை மீண்டும் உங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதற்காக அனுப்பி வைத்தோம். அதன்பிறகு நடந்த உங்களுடனான சந்திப்புகளில் நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதன் முக்கியத்துவத்தையும் உங்களுக்கு நான் வலியுறுத்தி இருக்கிறேன்.
மேலும் கடந்த சந்திப்பில் கூட அதற்கான நடைமுறை விரைவுபடுத்தப்படும் என்று நீங்கள் உறுதியளித்ததை நினைவுபடுத்தி பாருங்கள். ஆனால் தற்போது மீண்டும் அதை மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை என்பது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அடுத்த ஆண்டுக்கான மருத்துவக்கல்விக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். இதில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதுடன் ஒரு நிலையற்ற தன்மையும் உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த சூழ்நிலையில் எங்களுக்கு ஏற்பட்டு உள்ள ஏமாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். இந்த விஷயத்தில் உள்ள அவசரம் மற்றும் உணர்வுகளை அடிப்படையில் உங்களது கவனத்தை ஈர்ப்பதற்கு மீண்டும், மீண்டும் முயற்சி செய்தும் எந்த ஒரு சாதகமான பதிலும் உங்களிடம் இருந்து வரவில்லை என்பது என்னை மிகவும் கவலை கொள்ள செய்து உள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையை மனதில் வைத்து 14-ம் தேதி எனது 2 மூத்த அமைச்சர்களை உங்களிடம் அனுப்பி அந்த மசோதாவை அனுப்பி வைப்பதற்கான காலஅளவு குறித்த ஒரு தெளிவான பதிலை கேட்டிருந்தேன்.
ஆனால் துரதிர்ஷ்டமாக அது தொடர்பான எந்த ஒரு சாதகமான உத்தரவாதமும் தரப்படவில்லை என்று என்னிடம் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில்தான் ராஜ்பவனில் நீங்கள் நடத்தும் தேநீர் விருந்து விழாவில் கலந்து கொள்வது சரியானதாக இருக்காது என்று உணர்ந்தோம். அதாவது அது எங்கள் சமுகம் மற்றும் சட்டசபையில் ஒட்டுமொத்த கருத்துக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்கிறபோது நாங்கள் மேற்கண்ட முடிவை எடுத்தோம்.
மேலும் எங்களது கோரிக்கையில் உள்ள நேர்மையையும் நியாயத்தையும் நீங்கள் உணர்வீர்கள் என்று இப்போது கூட நான் நம்புகிறேன். எனவே இதனை எந்த ஒரு காலதாமதம் இல்லாமல் நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி அரசியல் சாசன கடமைகளை நிறைவேற்றுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். நாம் இருவரும் அரசியல் சாசனத்தின் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றும் போழுது இந்த மாநிலம் பல்வேறு முன்னேற்றங்களை பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும் நம்மிடையே உள்ள உறவு தொடர்ந்து நல்லுறவாகவும் இதயபூர்வமானதாகவும் மக்கள் நலனை பேணுவதாகவும் தொடரும் என்பதற்கு உறுதி அளிக்கிறேன் என்று தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? என்று கவர்னருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.