“கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது” என்று மிக கடுமையாக விமர்சித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை உடனே நீக்க வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது” என்று, காட்டமாக தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து பேசிய வைகோ, “கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு, 1947 ஆம் ஆண்டு பிறந்தது அல்ல என்று அவர் பேசி இருக்கின்றார்” என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
“அதாவது, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கூட்டம் என்ன பேசி வருகின்றதோ, டெல்லி முதலாளிகள் என்ன சொல்கின்றார்களோ, அதே கருத்தைத்தான் ஆளுநர் ரவி, அந்த மாநாட்டில் முன்வைத்து இருக்கின்றார்” என்பதையும் வைகோ சுட்டிக்காட்டி கொந்தளித்து உள்ளார்.
ஆளுநர் ரவி பேசியதை குறிப்பிட்டு பேசிய வைகோ, “அப்படியானால், 1947 க்கு முன்பு, இந்தியா என்ற நாடு, எங்கே இருந்தது? என்பதை அவர் விளக்க வேண்டும்” என்றும், வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.
அத்துடன், “200 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு வரையிலும், இந்தியாவில் 565 சிற்றரசுகள் தான் இருந்தன என்பது வரலாறு என்றும், அதற்கு முன்பும், மொகலாயர்கள் ஆட்சிக் காலத்திலும் கூட, தமிழ்நாடு ஒரு போதும், வட இந்திய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது இல்லை” என்றும், தெரிவித்து உள்ளார்.
“கடந்த 1947 ஆம் ஆண்டு வரையிலுமான ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் கூட, இப்போதைய இந்தியா என்ற அமைப்பு கிடையாது என்றும், தெற்கு இந்தியாவில், ஆந்திராவின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய ஐதராபாத் நிஜாம் அரசு ஒரு தனி நாடுதான்; கர்நாடகத்தின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய மைசூரு சமஸ்தானம் ஒரு தனிநாடுதான்; கேரளத்தின் பெரும்பகுதிகளை உள்ளடக்கிய திருவாங்கூர் சமஸ்தானம் ஒரு தனிநாடுதான். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம், 1947 வரையிலும் ஒரு தனி நாடுதான்” என்றும், வைகோ சுட்டிக்காட்டி பேசி உள்ளார்.
“வெள்ளைக்காரனின் துப்பாக்கியும், லத்திக் கம்புகளும் தான் இந்தியா என்ற நாட்டை உருவாக்கியது என்றும், இந்தியக் குடி அரசின் முன்னாள் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் பேசி இருக்கின்றார்கள். அந்த வரலாறு, ஆளுநர் ரவிக்குத் தெரியவில்லை” என்றும், வைகோ விமர்சித்து உள்ளார்.
“இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; பல்வேறுபட்ட பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் தான். இந்திய அரசு அமைப்புச் சட்டம் கூட, Union of India யூனியன் ஆஃப் இந்தியா, அதாவது இந்திய ஒன்றியம் என்றுதான் கூறுகின்றது” என்பதையும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், “அரசு அமைப்புச் சட்ட நாடாளுமன்றத்தில், நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்களின் முடிவில் அரசு அமைப்புச் சட்டத்தை வரைந்த அறிஞர்கள்தான், இந்தச் சொல்லைத் தேர்ந்து எடுத்து எழுதி இருக்கின்றார்கள் என்றும், அதுவும் ஆளுநருக்குத் தெரியவில்லை” என்றும், மிக கடுமையாக வைகோ விமர்சித்து உள்ளார்.
“அந்த மாநாட்டில், காணொளி உரை ஆற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அருமையான விளக்கம் அளித்து இருக்கின்றார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.
“புதிய கல்விக்கொள்கை என்பது, பிற்போக்குவாதம்; ஒன்றிய அரசு தனது பழமைவாதக் கருத்துகளை, பாடத்திட்டத்தின் வழியாக, மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது கவலை அளிக்கின்றது” என்று முதல்வர் பேசியதையும் வைகோ சுட்டிக்காட்டி உள்ளார்.
இப்படியாக, “மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டுக்கட்டை போடுகின்ற வேலையைத்தான் ஆளுநர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். தமிழ்நாட்டின் முந்தைய ஆளுநர் தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மேற்கு வங்கத்தின் தற்போதைய ஆளுநர் ஜெக்தீப் தங்கர் ஆகியோர், அரசு அமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து மீறி வருகின்றனர்” என்றும், வைகோ அனல்பற்ற குற்றம்சாட்டி உள்ளார்.
“மேற்கு வங்க அரசை, முதல்வரை நாள்தோறும் கடுமையாக வசைபாடி, சுட்டுரைகள் எழுதி வருகின்றார் ஜெகதீப் தங்கர். 7 பேர் விடுதலை குறித்த பிரச்சினையில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி, ஏழரைக் கோடித் தமிழர்களை அவமதித்து இருக்கின்றார். எனவே, அவர், ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அடிப்படை ஏதும் இல்லை” என்றும் கடுமையாகவே வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து வருகிறார்.
குறிப்பாக, “பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருக்கின்றது என்றும், அதே போல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்” என்றும், வைகோ வேண்டுகோள் விடுத்து உள்ளார்.