அபராதம் விதித்த போலீஸ் இன்ஸ்பெக்டரை பழி வாங்கும் வகையில், காவல் நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்து இன்ஸ்பெக்டருக்கு மின்வாரிய ஊழியர் அபராதம் விதித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி அருகே போலீசார் சிலர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் பகவான் ஸ்வரூப் என்பவர், தலைக்கவசம் அணியாமல் தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.
அப்போது, மின்வாரிய ஊழியர் பகவான் ஸ்வரூப்க்கு, அங்கு நின்றிருந்த காவல் உதவி ஆய்வாளர் 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பகவான் ஸ்வரூப், “நானும் அரசு ஊழியர் தான்” என்று, போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால், போலீசாரும் அந்த மின்வாரிய ஊழியருடன் வாக்குவாதம் செய்யவே, இறுதியில் வேறு வழியின்றி அந்த மின்வாரிய ஊழியர் 500 ரூபாய் அபராதத்தை செலுத்திவிட்டு, அங்கிருந்து சென்றிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அந்த காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் கோபம் அடைந்த மின்வாரிய ஊழியர் பகவான் ஸ்வரூப், குறிப்பிட்ட அந்த காவல் ஆய்வாளர் பணியாற்றும் ஹர்தாஸ்புர் காவல் நிலையத்திற்கு இது வரை வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பை, அந்த மின்வாரிய ஊழியர் பகவான் ஸ்வரூப், அதிரடியாக துண்டித்து உள்ளார்.
காவல் நிலையத்திற்கான மின் இணைப்பைத் துண்டித்ததை அடுத்து, இது குறித்து பேசிய மின்வாரிய ஊழியர் பகவான் ஸ்வரூப், “காவல் நிலையம் மின்சார மீட்டர் இல்லாமல் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “போலீசாரின் இந்த செயலை வேறு விதமாகக் கூறினால், சட்ட விரோதமாக மின்சாரத்தை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், இதனால் மின்வாரிய ஊழியர்களிடம் கலந்தாலோசித்து விட்டு தான், தற்போது சட்டத்திற்கு புறம்பாக காவல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை நாங்கள் துண்டித்து உள்ளோம்” என்றும், அந்த மின்வாரிய ஊழியர் விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, இது குறித்து விசாரணை நடத்திய மின்வாரிய ஊழியர்கள், “சட்ட விரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டதாகவும், அதற்கு உரிய அபராதத்தை காவல் நிலையம் சார்பில், அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டும்” என்றும், மின்வாரியம் தரப்பில் தற்போது நோட்டீஸ் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளரை பழி வாங்கும் வகையில், காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்து, அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு மின்வாரிய ஊழியர் அபராதம் வித்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.