ராமநாதபுரம் மன்னர் ராஜாகுமரன் சேதுபதி மாரடைப்பால் இன்றைய தினம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மன்னர் ஆட்சி மறைந்து, மக்களாட்சி நடைமுறையில் இருந்து வருகிறது.
என்றாலும், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் குறிப்பிட்ட சில இடங்களில் இன்றளவும் பழைய மன்னர்கள், தங்களது குடும்பத்துடன் சாதாரண மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மன்னர் என். குமரன் சேதுபதி, புகழ் பெற்று தனது குடும்பத்துடன் ராமநாதபுரம் அரண்மனையில் வாழ்ந்து வந்தார்.
அதாவது, தென் தமிழகத்தின் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியினை ஆட்சி செய்தவர்கள் இந்த சேதுபதிகள் ஆவர்.
அதுவும், தமிழ்நாட்டின் வங்கக்கரையின் அதிபதியாய் முதலில் போகளூரையும், அதன் பின்னர் ராமநாதபுரத்தையும் தலைநகராக்கி ஆட்சி புரிந்து ஆண்டு வந்தவர்களே சேதுபதிகள்.
குறிப்பாக, தென் தமிழகத்தின் சேது கரைக்கு இவர்களே அதிபதிகளாக திகழ்ந்த காரணத்தால், பின்னாளில் இந்த வம்சத்தினரே சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இவற்றுடன், ராமநாதபுரம் மன்னர் என். குமரன் சேதுபதி, ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராகவும், அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு செனட் உறுப்பினராகவும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் அவர் வகித்து வந்தார்.
இந்த நிலையில் தான், ராமநாதபுரம் சமஸ்தானத்தில் இளைய மன்னரான என். குமரன் சேதுபதிக்கு, இன்றைய தினம் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர் திடீரென்று அவர் இன்று உயிரிழந்தார். மறைந்த என். குமரன் சேதுபதிக்கு தற்போது வயது 56 ஆகும்.
இதனையடுத்து, மறைந்த ராமநாதபுரம் மன்னர் என். குமரன் சேதுபதி மறைவுக்கு, இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும், பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.