கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் நமது துணை ராணுவப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் உயிரிழந்து 40 வீரர்கள் செய்த உயிர்த் தியாகத்தை வைத்து மத்திய பா.ஜ.க. அரசும், தனியார் தொலைக்காட்சியும் அரசியல் ஆதாயமடைந்ததை எவராலும் மன்னிக்கவே முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டு உள்ளார். 


அந்த அறிக்கையில் , ‘’ கடந்த 2019 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ 23 ஆம்‌ தேதி ரிபப்ளிக்‌ தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. அதில்‌, "இன்னும்‌ 3 நாட்களில்‌ பாகிஸ்தான்‌ மீது மிகப்பெரிய தாக்குதலை இந்திய ராணுவம்‌ நிகழ்த்த இருப்பதாக கூறப்பட்டிருந்தது". இந்த செய்தியை ரிபப்ளிக்‌ தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தி டி.ஆர்‌.பி. ரேட்டிங்கை பலமடங்கு கூட்டி உச்சத்திற்கு கொண்டு சென்றது. 


இதன்மூலம்‌ விளம்பர வருவாயை அள்ளிக்‌ குவித்தது. அந்த தொலைக்காட்சி வெளியிட்ட அறிவிப்பின்படி உண்மையாகவே நடந்தது. பாகிஸ்தானில்‌ உள்ள புல்வாமாவில்‌ அமைந்திருந்த பயங்கரவாதிகள்‌ முகாமை இந்திய விமானப்படை தாக்கி, தகர்த்தது. அப்போது இந்த தாக்குதல்‌ குறித்து மிகப்பெரிய வெற்றியாக மத்தியில்‌ ஆளும்‌ பா.ஜ.க. கொண்டாடி மகிழ்ந்தது.

இந்தச்‌ சூழ்நிலையில்‌ தான்‌ பாகிஸ்தான்‌ மீது இந்திய விமானப்படை தாக்குதல்‌ நடத்தும்‌ என்று, முன்கூட்டியே கூறிய செய்தியின்‌ பின்னணியானது தற்போது வாட்ஸ்‌அப்பில்‌ வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 200 பக்கங்கள்‌ அடங்கிய உரையாடல்களை இணைத்து மும்பை காவல்துறை ரிபப்ளிக்‌ தொலைக்காட்சியின்‌ தலைமை செய்தி ஆசிரியர்‌ அர்னப்‌ கோஸ்வாமி மற்றும் முன்னாள்‌ ஒளிபரப்பு பார்வையாளர்‌ ஆராய்ச்சி கவுன்சில்‌ தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா ஆகியோர்‌ மீது டி.ஆர்‌.பி. மோசடி வழக்கில்‌ மேற்கூறிய தகவல்களை குறிப்பிட்டு துணை குற்றப்‌ பத்திரிகை தாக்கல்‌ செய்யப்பட்டுள்ளது.

மும்பை காவல்துறையால்‌ தாஸ்குப்தா கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்பட்டு வரும்‌ வேளையில்‌ இந்த வாட்ஸ்‌அப்‌ உரையாடல்கள்‌ வெளிவந்திருக்கிறது. மத்தியில்‌ ஆளும்‌ பா.ஐ.க., தேர்தல்களில்‌ வெற்றி வாய்ப்ப பெறுவதற்காக நாட்டின்‌ பாதுகாப்பு சம்மந்தமான ரகசியங்களை ஒரு தனியார்‌ தொலைக்காட்சியின்‌ சுயலாபத்திற்காக சமரசம்‌ செய்து கொண்டது லட்சக்கணக்கான ராணுவ வீரர்களை மட்டுமின்றி, தேசபக்தி உள்ளவர்களின்‌ மனசாட்சியை கடுமையாக பாதித்திருக்கிறது.

இத்தகைய தேசவிரோதச்‌ செயலை எவர்‌ செய்திருந்தாலும்‌ அவர்கள்‌ மீது வழக்கு பதிவு செய்து சட்டத்தின்‌ முன்‌ தண்டிக்கப்பட வேண்டும்‌ என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

புல்வாமா தாக்குதல்‌ குறித்து கருத்து கூறிய பாகிஸ்தான்‌ அதிபர்‌ இம்ரான்கான்‌, இந்தியாவில்‌ நடைபெற்ற தேர்தலில்‌ வெற்றி பெறுவதற்காக இதை பயன்படுத்திக்‌ கொண்டதாக குற்றம்‌ சாட்டியிருக்கிறார்‌.


இதன்மூலம்‌ பிரதமர்‌ மோடி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்‌. கடந்த 2019 ஆம்‌ ஆண்டு புல்வாமாவில்‌ நமது துணை ராணுவப்‌ படைகள்‌ மீது நடத்தப்பட்ட தாக்குதலால்‌ உயிரிழந்து 40 வீரர்கள்‌ செய்த உயிர்த்‌ தியாகத்தை வைத்து மத்திய பா.ஐ.க. அரசும்‌, தனியார்‌ தொலைக்காட்சியும்‌ அரசியல்‌ ஆதாயமடைந்ததை எவராலும்‌ மன்னிக்கவே முடியாது.

எனவே, பாரபட்சமின்றி நேர்மையாக தேர்தல்‌ நடத்தி, அதில்‌ வெற்றி பெறுவதற்கு மாறாக மதவாத உணர்வுகளை தூண்டி, வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற நோக்கில்‌ பிரதமர்‌ மோடி செய்த சூழ்ச்சிகள்‌ புல்வாமா தாக்குதல்‌ பின்னணி குறித்து வாட்ஸ்‌ அப்பில்‌ வெளிவந்த உரையாடல்கள்‌ அம்பலப்படுத்தியுள்ளன.


இதன்மூலம்‌ வெளியாகியிருக்கிற இந்தியாவின்‌ பாதுகாப்பை அச்சுறுத்துகிற உரையாடல்‌ குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்‌. இல்லையெனில்‌ இதனால்‌ ஏற்படுகிற தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர்‌ ஆளாவதிலிருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கையோடு கூற விரும்புகிறேன்‌” என்று கூறப்பட்டு இருக்கிறது.