டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவு உணவு சாப்பிட்ட மாணவர்களை ஏபிவிபி அமைப்பு மாணவர்கள் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநவமியை முன்னிட்டு டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிடும் விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்து அமைப்பு மாணவர்கள் பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் பல்கலைக்கழக வளாகத்ஹ்தில் உள்ள விடுதியில் அசைவ உணவு வழங்கக்கூடாது என ஆர் எஸ் எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சில மாணவர்கள் விடுதியில் அசைவ உணவு உண்ணும் போது, அங்கு சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதி செயலாளரையும் தாக்கி, இரவு உணவு மெனுவை மாற்ற வேண்டும் எனவும், அசைவ உணவு வழங்க கூடாது என்றும் வற்புறுத்தியுள்ளனர்.
இது ஜனநாயக விரோத செயல் எனவும், உணவு அவரவர் தனிப்பட்ட உரிமை எனக்கூறி இடதுசாரி மாணவர் அமைப்பினரும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து இடதுசாரி அமைப்பு மாணவர்களுக்கும் ஏபிவிபி மாணவர்களுக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த கடுமையான தாக்குதலில் 60 பேர் காயம் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஆனால் 6 பேர் மட்டுமே காயமடைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்கு அவர்கள் யார் என்றவர், மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஜே.என்.யு நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்யாதது ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் அசைவ உணவு சாப்பிட்டதால் மோதலில் ஈடுபடவில்லை என ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ராமநவமி பூஜைக்கு ஏற்பாடு செய்ததாகவும், அதற்கு இடதுசாரி மாணவர்கள் தெரிவித்த எதிர்ப்பே மோதலுக்கு காரணம் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மாணவர்கள் அமைப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் இருந்து வருகிறது. மோதலில் காயமடைந்த ஜேஎன்யு மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.என்.பாலாஜி கூறுகையில், ஏபிவிபி மாணவர்களை டியூப் லைட்டுகளால் தாக்கினர், பெரிய கற்கள், பெரிய பாத்திரங்களின் மூடிகளை எங்கள் மீது வீசினர் பாதுகாப்பு, நிர்வாக அதிகாரிகளை அழைக்க முயற்சித்தேன், ஆனால் யாரும் உதவி செய்ய வரவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஜேஎன்யு மாணவர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் ஐஷே கோஷ் கூறுகையில்: மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர், அதே நேரத்தில் டெல்லி காவல்துறை மற்றும் ஜேஎன்யு நிர்வாகம் மீண்டும் வாய்மூடி பார்வையாளர்களாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார். காயமடைந்த மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின்படி முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்படும். சாட்சிகளின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.