இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு சோஷியல் மீடியாவில் பாலியல் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐபிஎல் போட்டி, பின்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்தது. இதன்பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையில், ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி ஆடி வருகிறது.
இதில் உலகின் தலைசிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று போட்டி துவங்குவதற்கு முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய அணியும் பயிற்சி ஆட்டங்களில் வெற்றிபெற்றது. ஆனால் அதன்பிறகு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி உடனான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணி உடனான போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. 2 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்து கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், சிலர் கேப்டன் விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும், ஆபாசமான முறையிலும் ட்விட்டரில் பதிவுகளை மேற்கொண்டனர்.
இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறையை, டெல்லி மாநில மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை மேற்கொண்டவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், குழந்தைகளின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசத்தையும் மேற்கொள்ள முடியாது என்றும் டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறைக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் உடனான தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் சீனியர் வீரரான முகமது ஷமி, மதரீதியாக கடுமையான முறையில் சோஷியல் மீடியாவில் தாக்கப்பட்டார். ஆனால் முகமது ஷமிக்கு ஆதரவாக முன்னாள் வீரர்கள் பலரும் குரல் கொடுத்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், மதரீதியான தாக்குதல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில்தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அவரது 9 மாத பெண் குழந்தை வாமீகாவுக்கு மிரட்டல் வந்துள்ளது. பாலியல் மிரட்டல் வந்து வைரல் ஆன அந்த ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. எனினும், பாலியல் அச்சுறுத்தலை ட்வீட் செய்த நபரின் அடையாளம் இன்னும் முழுமையாக சரிபார்க்கப்படவில்லை.
இதற்கிடையில், மிகவும் காட்டுமிராண்டித்தனமான இந்த ட்விட்டர் பதிவிற்கு, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறுகையில், ‘விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல்கள் வருவதாக கேள்விப்பட்டேன். இது வெறும் விளையாட்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடலாம், ஆனால் நாங்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோலியின் பேட்டிங் அல்லது அவரது கேப்டன்ஷிப்பை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது.
ஆனால், கிரிக்கெட் வீரரின் குடும்பத்தை தாக்க யாருக்கும் உரிமை இல்லை. வெற்றி தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி. கோலியின் குடும்பத்தை மக்கள் தாக்குவதைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைந்தேன்’ என்று இன்சமாம் தனது யூ-டியூப் சேனலில் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த ஐபிஎல் 2020 போட்டியின் போது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஐந்து வயது மகள் ஜிவாவுக்கு,பாலியல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.