லடாக்கில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்தில், நமது ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
லடாக்கில் நமது இந்திய ராணுவ வீரர்களுடன் வாகனம் ஒன்று, 26 ராணுவ வீரர்களுடன் சென்றுக்கொண்டிருந்து உள்ளது.
அந்த வாகனம், ஷியோக் ஆற்றில் கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக, திடீரென்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில், அந்த வாகனத்தில் சென்ற நமது ராணுவ வீரர்கள் 7 பேர், பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வாகன விபத்து தொடர்பாக விரைந்து வந்த மீட்பு படையினர், உடடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, இன்னும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து, படுகாயம் அடைந்த ராணுவ வீரர்கள் அங்குள்ள மருத்துவுமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், மீட்பு படையினர் படுகாயம் அடைந்த வீரர்களை, ஹெலிகாப்டர் மூலமாக மீட்டு உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், லேசான காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களை இந்திய விமானப்படை மூலம் அங்குள்ள மேற்கு பிராந்திய தலைமையகத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், மீதமுள்ள 19 ராணுவ வீரர்களும், விமானம் மூலம் சண்டி மந்திர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும், ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், முழுமையான விசாரணைக்கு பிறகே இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும்போது, “பர்தார்பூரில் உள்ள தற்காலிக ராணுவ முகாமில் இருந்து, எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது என்றும், இந்த வாகனம் காலை 9 மணி அளவில் தோய்ஸ் பகுதிதியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்து தடுமாறு ஷியோக் ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.
குறிப்பாக, “விபத்தில் சிக்கிய இந்த வாகனம் 50 அடி முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில் தான், நமது ராணுவ வாகனம் கவிழ்ந்தது என்றும், இதில் 7 வீரர்கள் உயிரிழந்தனர்” என்றும், அவர் கூறியுள்ளார்.
“மீதமுள்ள வீரர்கள் காயம் அடைந்தனர் என்றும், காயம் அடைந்த வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.
அதே நேரத்தில், இந்த துயரமான சம்பவம் பற்றி தனது வேதனையை தெரிவித்து உள்ள பிரதமர் மோடி, “பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்று, உறுதி அளித்து உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் நமது துணிச்சல் மிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்றும், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.
“காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றும், பிரதமர் மோடி கூறியுள்ளார்.