அதிமுக அரசைப் பற்றி விமர்சனம் செய்வது மட்டுமே ஸ்டாலின் வேலை. டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக என்று கடலூர் புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழி தேவனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்யும் போது பேசினார்.


மேலும் அவர், ‘’ நான் ஊர்ந்து சென்று முதல்வரானேன் என்கிறார்கள். ஊர்ந்து செல்ல நானென்ன பாம்பா? பல்லியா? மனுஷனய்யா. விவசாயிகள் பிரச்சினை பற்றி ஸ்டாலினுக்குச் சிந்திக்கவும் தெரியாது. சிந்தித்தால் அவருக்குப் பேசவும் தெரியாது. டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தது திமுக தான். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தே கையெழுத்துப் போட்டார்கள்.


பின்னர் மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன், அப்படியே பல்டி அடித்து அவர்கள் எதிர்க்கிறார்.ஹைட்ரோகார்பனை கொண்டு வந்ததும் ஸ்டாலின். எதிர்த்துப் போராட்டம் நடத்துவதும் ஸ்டாலின். 


விஞ்ஞான முறையில் இன்று விவசாயம் செய்யும் அளவுக்கு விவசாயிகள் வளர்ந்துள்ளார்கள். இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் தான் நிபுணர்களிடம் கலந்து பேசி, அதற்கு ஒரு சட்டம் இயற்றி இன்றைக்கு இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றினோம். 


இனிமேல் யாரும் உங்கள் நிலத்தில் கை வைக்க முடியாது. நான் வயலில் இறங்கி நடவு செய்துள்ளேன். வயலில் இறங்கி நடக்க விவசாயிக்கு மட்டும் தான் தெரியும். நான் பாட்டன், அப்பன் காலத்திலிருந்தே விவசாயம் தான் செய்கிறேன்.