கொரோனா விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு! தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை..!

கொரோனா விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு! தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை..! - Daily news

கொரோனா விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ள நிலையில், தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்று, அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த வருடம் இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இதன் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளி - கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் கடந்த வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாகத் தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இதனால், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்தும் வருகிறது.
 
அதன் படி, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 7 ஆம் தேதியான இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படியே, சுமார் 8 மாத கால விடுமுறைக்குப் பிறகு இன்று காலை முதல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இறுதி ஆண்டு இளநிலை மாணாக்கர்களுக்காக கல்லூரியைத் திறக்க தமிழக அரசு அறிவுறுத்தியபடி, இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன. 

மேலும், கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கி கொள்ளலாம் என்றும், கல்லூரியின் விடுதியில் ஒரு அறைக்கு ஒரு மாணவர் மட்டுமே தங்க வேண்டும் என்றும், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. 

அத்துடன், வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்றும், காய்ச்சல் தொற்று இருந்தால் மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை எனவும், தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. இதன் காரணமாக, விருப்பமுள்ள மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்கு வருகை புரிந்தனர்.   

கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைக்கு வருவதற்கு முன்பு, அதன் வாசலில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர் கொண்டு கைகளைக் கழுவினர். 

மேலும், கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்த வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவற்றுடன், மாணவர்கள் பெரும்பாலும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும், முகக்கவும் அணிந்தும், இன்று கல்லூரிக்கு வருகை தந்தனர்.

அது போல், கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரலாம் என்றும், மற்றவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் கற்றல் பணிகளைத் தொடரலாம் என்றும், தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது. அத்துடன், மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஒரு சமயத்தில் 50 விழுக்காடு மாணவர்களை மட்டுமே கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும் என்றும், இதனைப் பின்பற்றும் வகையில் சுழற்சி முறை வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், ஏற்கனவே தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இதன் காரணமாக, இன்று முதல் கல்லூரிக்கு மாணவர்கள் குறைந்த அளவே வருகை தந்திருந்தனர். இதில், மாணவிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே வருகை தந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ள நிலையில், காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறியோடு வரும் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னையில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment