மது அருந்தும் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள்... எந்த மாநிலங்களில் அதிகம்?... ஆய்வில் வெளியான தகவல்... !
இந்தியாவில் மதுபானங்கள் அருந்தும் பெண்களின் சதவீதம் 7.5 ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்தும் பழக்கம் பொதுவாக ஆண், பெண் இருபாலரின் உடல்நிலைக்குமே கேடு என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. இதனால்தான் திரைப்படங்களில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவை உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்ற வாசகமும் திரைப்பட காட்சிக்கு முன்னதாக திரையிடப்படுகிறது.
எனினும் மறுபக்கம் மது அருந்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, ஒழிந்தபாடில்லை. இந்நிலையில் தான் இந்தியாவில் நாடு முழுவதும் யு.பி.எஸ். என்ற நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில் இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை எவ்வளவு, எவ்வளவு பேர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மது அருந்தும் விகிதாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
யு.பி.எஸ். என்ற நிறுவனம் நடத்திய அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“2020 ஆம் ஆண்டில் மொத்த மதுபான கொள்முதல் அளவு 29 சதவீதம் குறைந்துள்ளது. மதுபானங்கள் ஒப்பீட்டளவில் 19.7% குறைந்து உள்ளது,
அதேநேரத்தில் பீர் 39.1% குறைந்துள்ளது. தனிநபர் ஆல்கஹால் நுகர்வு என்பது ஆசிய அளவில் (6.4 லிட்டர்) மற்றும் உலக அளவில் (6.2 லிட்டர்) சராசரிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் (5.5 லிட்டர்) குறைவாக உள்ளது.
இந்தியா முழுவதும் சுமார் 16 கோடி பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்கள். குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டங்களில்தான் மதுஅருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்திய மதுபானச் சந்தையை பொறுத்தவரை, யூனியன் ஸ்பிரிட்ஸ் என்ற பிராண்டின் கீழ் வரும் மதுபானங்கள் தான் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. அதிக அளவு விற்பனையாகும் பீர் ரகங்களில் யுனைட்டெட் புரூவெரிஸ் நிறுவனத்தின் பீர்கள் முதலிடத்தில் உள்ளன.
கிங் பிஷர் பீர் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பது நினைவில்கொள்ள வேண்டியது. நாட்டிலேயே மதுபானப் பிரியர்கள் அதிகம் உள்ள மாநிலங்களாக ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், அரியானா, இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இருக்கின்றன.
கள் மற்றும் நாட்டு சாராய விற்பனையிலும் ஆந்திராவும், தெலங்கானாவும் முதலிடத்தில் உள்ளன. அதே சமயத்தில், காஷ்மீர், மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கள் மற்றும் நாட்டு சாராயங்களின் விற்பனை மிகக் குறைவாக உள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக சமூக அமைப்புகளும், பெண்களும் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடையால் அதிகம் வன்முறை நிகழ்வதாகவும், உயிரிழப்பு நடைபெறுவதாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒவ்வொரு குடும்பமும் வாழ்வாதாரத்தை இழப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதனால்தான் தமிழகத்தில் டாஸ்மாக் கடை அமைக்கும்போதெல்லாம் அவ்வப்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் யுபிஎஸ் நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.