கண்ணை மறைத்த கடவுள் பக்தி.. கடவுள் கனவில் வந்து சொன்னதாக கூறி “உயிருடன் ஜீவசாமதி” அடைய முயன்ற பெண்ணால் பரபரப்பு..
By Aruvi | Galatta | Feb 12, 2021, 09:33 am
கடவுள் கனவில் சொன்னதாக கூறி பெண் ஒருவர் “உயிருடன் ஜீவசாமதி” அடைய முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கட்டம்பூர் அருகில் உள்ள சஜேதி பகுதியைச் சேர்ந்த ராம் சஜீவன் என்பவரது மனைவி 50 வயதான கோமதி தேவி என்ற பெண், கடவுள் மீது அதிக ஈடுபாட்டுடன் இருந்து வந்திருக்கிறார். வீட்டில் இருக்கும் போதெல்லாம் எந்நேரமும் கடவுள் வழிபாட்டிலேயே அவர் இருந்து வந்திருக்கிறார்.
இப்படியாக, அந்த பெண்ணின் கடவுள் வழிபாடு நாளுக்கு நாள் அதிகமாகவே, ஒரு கட்டத்தில் கடவுள் வழிபாடு நடத்துவதற்காக, தனக்கு வீட்டின் அருகிலேயே குழி தோண்டி தருமாறு தனது குடும்பத்தாரிடம் அவர் கேட்டு உள்ளார். அதன் படியே, அவரது வீட்டாரும், அந்த பெண் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அக்கம் பக்கத்தினருக்கு யாருக்கும் தெரியாத நிலையில், அவரது வீட்டின் முன்பு உறவினர்கள் ஒரு குழி தோண்டி கொடுத்து இருக்கிறார்கள். சுமார் 4 அடி ஆழத்திற்கு அந்த குழியைத் தோண்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த குழியில், குறிப்பிட்ட அந்த பெண் தினமும் பூஜை செய்து வந்திருக்கிறார்.
மேலும், “மகா சிவராத்திரி அன்று கடவுள் தனது கனவில் வந்ததாகவும், அதனால் நான் ஜீவசமாதி அடையப் போகிறேன்” என்றும், எனக்கு குடும்பத்தில் உள்ள நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” என்றும், அந்த பெண் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இதனை அடுத்து, அந்த பெண் குழிக்கு முன் பூஜைகள் செய்து வழிபட்டு வந்திருக்கிறார். அதன் பிறகு, அந்த பெண் கோமதி தேவி, குழிக்குள் இறங்கி அமர்ந்த நிலையில் தியானம் செய்யத் தொடங்கி உள்ளார். அப்போது, அவரது உறவினர்கள் அந்த பெண்ணை துணியால் போர்த்தி விட்டு, குழியில் மண்ணைப் போட்டு அவரது உறவினர்கள் மூடி உள்ளனர்.
இது குறித்த தகவல் எப்படியோ அக்கம் பக்கத்தினருக்குத் தெரிந்து விட்டது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இது குறித்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழிக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட கோமதி தேவியை மீட்டு அவரச அவசரமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, அந்த பெண்ணிற்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, அந்த பெண் மருத்துவமனையில் உடல் நலம் தேறி தற்போது அவர் நலமுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மீட்கப்பட்ட பெண்ணை, மனநல சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்க, அந்த பெண்ணிற்குத் தொடர்ந்து மனநல சிகிச்சைகள் அளிப்பாதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
இதனிடையே, மூட நம்பிக்கையால் பெண் ஒருவர் உயிருடன் ஜீவசமாதி அடைய முயன்ற சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.