``தண்டனையை மகிழ்வோடு ஏற்பேன்" - பிரசாந்த் பூஷன்
By Nivetha | Galatta | Aug 20, 2020, 03:46 pm
கடந்த ஜூன் மாதம், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஒரு உயர்தர மோட்டார் சைக்கிளில் இருப்பது போன்ற படம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இதுவரை இருந்த நான்கு பேரின் பங்களிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பிரசாந்த் பூஷண் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவு செய்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மஹேக் மஹேஸ்வரி, கடந்த ஜூலை 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், `கடந்த ஜூன் 29-ஆம் தேதி தமது டிவிட்டர் பக்கத்தில் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரூ. 50 லட்சம் மதிப்பிலான பாஜக தலைவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நாக்பூரில் உள்ள ராஜ் பவன் வளாகத்தில் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுகிறார். அதுவும் உச்ச நீதிமன்றத்தை முடக்கி விட்டு குடிமக்கள் நீதி பெறும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிலையில்' என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.
அப்படியான சூழலில், இன்று அவருக்கு தண்டனை அறிவிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தில், தன்னை குற்றவாளி என்று அறிவிக்கும் தீர்ப்புக்கு எதிரான தம்முடைய சீராய்வு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தனக்கு தண்டனை அறிவிக்கக்கூடாது என்று பிரசாந்த் பூஷன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. தண்டனை அறிவித்த பிறகுதான் தீர்ப்பு முழுமை பெறும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக இந்த விசாரணை நடைபெற்றது. பிரசாந்த் பூஷன் சார்பில் வழக்குரைஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
``மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் வரை தண்டனை இருக்காது என்று உறுதி தருகிறேன்" என்றார் நீதிபதி அருண் மிஸ்ரா.
``நீங்கள் எங்களிடம் சரியாக, நியாயமாக நடந்துகொள்ளாவிட்டாலும் நாங்கள் உங்களிடம் நியாயமாகவே நடந்துகொள்வோம்" என்று குறிப்பிட்டார் நீதிபதி அருண் மிஸ்ரா.
``குற்றவாளி என்று தீர்ப்புரைத்தலும், தண்டனை வழங்குவதலும் இரண்டு தனித்தனியான விஷயங்கள்" என்று வாதிட்ட துஷ்யந்த் தவே, ``மறு சீராய்வு செய்வதற்கான எனது முறையீடு மிகவும் சரியானது, தண்டனை வழங்குவது தள்ளிவைக்கப்படலாம் ர். அப்படி தண்டனையைத் தள்ளிவைப்பதால் வானம் ஏதும் இடிந்துவிழாது" என்றும் குறிப்பிட்டார்.
"நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் என் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருப்பதற்காக நான் வேதனைப் படுகிறேன். இந்த வேதனை எனக்கு தண்டனை விதிக்கப்படும் என்பதற்காக அல்ல. நான் மிகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளேன் என்பதற்காக" என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டார் பிரசாந்த் பூஷன்.
"ஜனநாயகத்தையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்று கருதுகிறேன். என்னுடைய ட்விட்டர் பதிவுகள் என்னுடைய கடமையை நிறைவேற்றும் முயற்சிகளே. அமைப்பு மேம்படுவதற்காகப் பணியாற்றும் முயற்சி என்றே என்னுடைய ட்வீட்டுகள் பார்க்கப்படவேண்டும்" என்று வாதிட்டார் பிரசாந்த் பூஷன்.
இந்த விவாதத்தில் பங்கேற்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், "நீதித்துறையில் ஊழல் நடந்தால் அதை எப்படி அம்பலப்படுத்துவது?" என்று கேட்டார்.
இந்நிலையில், இன்றைய தினம் ``நான் கருணை காட்டும்படி கேட்கவில்லை. பெருந்தன்மை காட்டும்படி கேட்கவில்லை. தண்டனை எதுவாக இருந்தாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்" என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார் தண்டனை குறித்த தீர்ப்புக்காக காத்திருக்கும் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன்