தென்காசி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 38. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தமரம் பகுதியை சேர்ந்த மோகனா வயது 36 என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் தம்பதி இருவரும் சேர்ந்தமரம் தண்ணீர் தொட்டி தெருவில் உள்ள மோகனாவின் சகோதரர் வீட்டில் வசித்து வந்தனர். இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் மோகனா மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் மேலும் கடந்த சில நாட்களாக மோகனாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மோகனா நேற்று நள்ளிரவு வீட்டில் இருந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ராதாகிருஷ்ணன் காப்பாற்ற முயற்சித்தபோது, அவர் மீதும் தீ பரவியது. இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று இருவர் மீதும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் மோகனா உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். ராதாகிருஷ்ணன் பலத்த தீக்காயம் அடைந்தார்.
அதனைத்தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.