இதோ வருகிறது “கொரோனா 4 வது அலை” எப்போது தெரியுமா?
“இந்தியாவில் கொரோனா 4 வது அலை எப்போது வரும்?” என்று, ஆய்வாளர்கள் கணித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
கொரோனா என்னும் கொடிய தொற்று நோய் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
என்றாலும், இந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ், முதல் அலையை கடந்து, 2 வது அலையும் வந்து, 3 வது அலையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தீவிரமாக பரவிய நிலையில், தற்போது தான் மெல்ல இயல்பு நிலை திரும்பியிருக்கிறது.
ஆனால், இந்தியாவைத் தவிர்த்து, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகளில் கொரோனா 4 வது அலையே வந்துவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அலையாக பரவி பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அதன் பிறகு, கடந்த 2021 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் 2 வது அலையாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றது.
இதற்கு டெல்டா கொரோனா வகை அடிப்படையாக அமைந்திருந்தது என்றும், கூறப்பட்டது. அதன் பிறகு தான், டெல்டா பிளஸ், ஒமைக்ரான் ஆகிய வகைகளாலும் கொரோனா பாதிப்புகள் பரவத் தொடங்கியது.
அதன் படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் அதிவேக கொரோனா பரவல், அதன் தொடர்ச்சியாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியது.
எனினும், தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா 3 வது அலை தீவிரமாக பரவி, தற்போது அடங்கி உள்ள நிலையில், நாள்தோறும் மிக குறைந்த எண்ணிக்கையில் அது பரவிக்கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில், கொரோனா 4 வது அலை பற்றிய கணிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.
இது குறித்து ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “இந்தியாவில் கொரோனா 4 வது அலையானது, வருகிற ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோடபர் 24 ஆம் தேதி வரை நீடிக்கும்” என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
எனினும், “இந்த புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட பொது மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த 4 வது அலையின் கடுமை இருக்கும்” என்ம், கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும், “ஒரு வேளை இந்த 4 வது அலையின் பரவல் தோன்றினால், அது அடுத்த 4 மாதங்கள் வரை நீடித்து இருக்கும்” என்றும், ஆய்வாளர்கள் கவலைத் தெரிவித்து உள்ளனர்.
அத்துடன், “இந்த 4 வது அலையானது, வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை உச்சமடையும் என்றும், அதன் பிறகு மெல்ல மெல்ல குறைய தொடங்கும்” என்றும், ஆய்வாளர்கள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா அலை பற்றி 3 வது முறையாக ஐஐடி கான்பூர் கணித்து வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், 3 வது கொரோனா அலை பற்றி வெளியான கணிப்புகள் துல்லியமுடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.