பள்ளி கல்லூரிகளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை திறக்க தடை! 3 ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு..
Galatta | Jul 30, 2020, 09:15 am
கொரோனா பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி கல்லூரிகளை ஆகஸ்ட் 31 ஆம்
தேதி வரை திறக்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா வைரஸ் என்னும் பெருந் தொற்று பரவத் தொடங்கியது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால், தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. எனினும், இடைப்பட்ட காலத்தில் கொரோனா நோய் தொற்று சற்று குறைந்து இருந்ததால், 2 கட்ட தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன.
இதனையடுத்து, மீண்டும் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கத் தொடங்கியதால், மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 3 ஆம் கட்ட தளர்வுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு தற்போது
வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வருகிறது. இந்த 3 ஆம் கட்ட தளர்வில், “நாடு முழுவதும் இரவில் தனி மனித நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.”
மேலும், “நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு” தொடர்வதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
“திரையரங்குகள், மதுபானக் கூடங்கள், மெட்ரோ ரயிலுக்குத் தடை தொடர்கிறது” என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.
“உள் நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச விமான சேவைக்குத் தடை நீட்டிப்பு; வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்” என்றும், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, “பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை திறக்க கண்டிப்பாக அனுமதி இல்லை” என்றும், உள்துறை அமைச்சகம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.
அத்துடன், “ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி” அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும், “ ஊர் திருவிழா, கட்சி கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், மது பானக்கூடங்கள், மெட்ரோ ரயில், திரையரங்குகள் மீதான தடை தொடரும்” என்றும், மத்திய அரசு அறிவித்துள்ளது.
“நோய் எளிதில் தாக்க வாய்ப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“சுதந்திர தினக் கொண்டாட்டம் தனி மனித இடைவெளியுடன் நடைபெற வேண்டும்” என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக, 2 ஆம் கட்ட தளர்வுகளுக்கும், 3 ஆம் கட்ட தளர்வுகளுக்கும் சிறிய அளவிலான தளர்வுகள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.