மேம்பாட்டு நிதி என்கிற பெயரில் ரயில் கட்டணம் உயர்கிறது!
ரயில் நிலைய மேம்பாட்டு நிதியாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதால், ரயில் கட்டணம் தற்போது இன்னும் கணிசமாக உயரும் நிலை சூழல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் சேவைகள் பெரும்பாலும் முடக்கப்பட்டன. ஆனாலும், சில முக்கிய ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
இதனால், இந்திய ரயில்வேவுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.
ஆனாலும், இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட சில முக்கிய ரயில் நிலையங்களை தனியார் மற்றும் பொதுப் பங்களிப்புடன் மேம்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அத்துடன், இந்தியாவில் உள்ள சில முக்கியமான விமான நிலையங்களைப் போலவே, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களிலும் பயணிகளிடம் மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில், ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போரிடம் டிக்கெட் கட்டணத்துடன் தலா 10 ரூபாய் கூடுதலாக பெற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவுப் பெட்டிகளில் 2 ஆம் வகுப்பு இருக்கை மற்றும் படுக்கை வசதி பயணிகள் மற்றும் முதல் வகுப்பு பயணிகளிடமும் கட்டணத்துடன் 25 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, குளிர்சாதன வசதி கொண்ட முன் பதிவுப் பெட்டிகளில் பயணிப்போருக்கு தலா 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவற்றுடன், மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும் என்றும், அத்தகைய ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் என்றால், மேம்பாட்டு நிதியாக பாதி கட்டணம் செலுத்த வேண்டும்” என்கிற புதிய தகவல்களும் வெளியாகி உள்ளன.
அதே போல், “ஒரு பயணி புறப்படும் இடமும், இறங்கும் இடமும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் என்றால், 1 புள்ளி 5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, “ 2 நிலையங்களுக்கும் தலா 50 ரூபாய் மேம்பாட்டு நிதி என்றால், அந்த நிலையங்களை பயன்படுத்தும் பயணி 100 ரூபாய்க்கு பதில் 75 ரூபாய் செலுத்த வேண்டும்” என்கிற சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இவற்றுடன், “மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்துடன் கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்” என்கிற ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அதே போல், “புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் சீசன் டிக்கெட் வசதியை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் கிடையாது” என்கிற தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதனால், சக ரயில் பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.