“ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” நாடாளுமன்றத்தில் முழங்கிய டிஆர்பாலு.. ஆளுநரை திரும்பப் பெறக்கோரி அமளி..
“ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு? என்று, அறிஞர் அண்ணா அன்றே கேட்டார் என்று, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடுமையாக முழங்கிய நிலையில், ஆளுநர் ரவியை திரும்பப் பெறக்கோரி தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தொடர்பான சட்ட மசோதாவை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கிட்டதட்ட 4 மாதத்துக்குப் பிறகு திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார். இதனால், தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த விவகாரம் நேற்றைய தினம் மக்களவையிலும் மிக கடுமையாக எதிரொலித்தது.
அதன் படி, “தமிழகத்தின் உரிமையை பறீக்காதீர்கள்” என்று, தமிழக ஆளுநருக்கு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் மிக கடுமையான கண்டனம் தெரிவித்து கடும் அமளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, “திரும்பப் பெறு.. திரும்பப் பெறு.. தமிழக ஆளுநரை திரும்பப் பெறு” என்று, தமிழக எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் நாடாளுமன்றத்தில் கடுமையான கண்டன முழக்கங்களை எழுப்பி, அமளில் ஈடுபட்டனர்.
மேலும், “ஆளுநரை திரும்ப பெறு.. தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம்.. நீட் தேர்வை ரத்து செய்” என்று, தொடர்ந்து கண்டன முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு தங்களது கண்டத்தையும் தெரிவிக்கும் வகையில், அவர்கள் அனைவரும் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு முன்னதாக நாடாளுமன்றத்தில் முழங்கிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, “தமிழக கட்சிகள் மட்டுமின்றி, பொது மக்களும் கூட நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர்” என்று, குறிப்பிட்டார்.
“இப்படி தமிழக மக்களின் குரலுக்கு செவி சாய்க்காத ஆளுநர் தமிழகத்தில் இருந்து என்ன பயன்?” என்றும், டி.ஆர்.பாலு, கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “தமிழக மக்களின் கோரிக்கைகளை மதிக்காத ஆளுநர் தமிழகத்திற்கு ஏதற்கு?” என்றும், வரிசையாக டி.ஆர்.பாலு, கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, “இன்று அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவர் கூறியதை இந்த சபையில் நினைவுகூற விரும்புகிறேன்” என்று குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, “ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் ஏன் என்று அறிஞர் அண்ணா அன்றே கேட்டார். ஆளுநரின் இந்த செயல் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும், நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, மிகவும் ஆவேசமாக பேசினார்.
அத்துடன், “ஆளுநரின் செயல்பாடுகள் முறையாக இல்லை என்றும், நீட் தேர்வு விலக்கு மசோதா கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது என்றும், குடியரசுத் தலைவருக்கு கூட அவர் அனுப்பவில்லை” என்றும், குற்றம்சாட்டினார்.
“ஆர்ட்டிகள் 200, 201 ன் படி குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்ப வேண்டும். ஆனால், ஆளுநர் அதை செய்யவில்லை” என்றும், எம்.பி. டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் தமிழக ஆளுநர் ரவி மீது குற்றம்சாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று காலை தொடர்ந்து 2 வாது நாளாக நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் நாடாமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, “சட்டமன்ற மசோதாவை ஆளுநர் எப்படி திருப்பி அனுப்பலாம்?” என்று, ஆவேமாக கேள்வி எழுப்பினார்.
அதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து வெளி நடப்பு செய்து, மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே போல், தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக இன்றைய தினம் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதனிடையே, “முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், அதனை 8 வாரங்களுக்கு தள்ளி வைப்பாக” மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.