மராட்டியத்தில் குணமடைந்த முதல் ஒமிக்ரான் நோயாளிக்கு 7 நாள் தனிமை அவசியம்
மராட்டியத்தில் குணமடைந்த முதல் ஒமிக்ரான் நோயாளிக்கு 7 நாள் தனிமை படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் விஜய் சூர்யவன்சி கூறியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம் கல்யாண் பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 33 வயது பயணிக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டது. அந்த பயணியை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதனையடுத்து அந்த பயணி குணமடைந்ததால் அவர் நேற்று வீடு திரும்பினார். இந்த தகவலை கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி கமிஷனர் விஜய் சூர்யவன்சி உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டார் என்பதை குறிப்பிட்டார்.
மேலும் ஒமிக்ரான் குறித்து ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும்.
மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.