“நந்திகிராமில் நான் தோற்றது சதி.. பவானிப்பூரில் வெற்றபெற வைத்த மக்களுக்கு நன்றி! - மம்தா
“பவானிப்பூரில் எனக்கு வாக்களித்து வெற்ற பெற வைத்த மக்களுக்கும், தான் வெற்றி பெற எனக்காக உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி” என்று, மேற்குவங்க முதலரைமச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.
ஆனாலும், அப்போது மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இப்படியாக 6 மாதங்களுக்குள் அவர் எம்எல்ஏ வாக வேண்டும் என்பதால், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்எல்ஏ ராஜினாமா செய்தார். அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்குக் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
வானிபூரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஆறாயிரத்து 456 ஆக உள்ளது. இதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 243 ஆண்கள், 95 ஆயிரத்து 209 பெண்கள் இருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்து, பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது, இன்று காலை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணும் பணியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட்டன.
குறிப்பாக, மம்தா பானர்ஜி போட்டியிடும் தொகுதி என்பதால், பவானிபூர் இடைத் தேர்தல் முடிவுகள் அந்த மாநிலம் மட்டுமில்லாது, இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதன் படி காலை முதலே பவானிபூரில் முதல் 2 சுற்றுக்கள் நிலவரப்படி மம்தா பானர்ஜி, பாஜகவின் பிரியங்கா டிப்ரோலை விட முன்னிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தான், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.
குறிப்பாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 84,709 வாக்குகள் பெற்றுள்ளார். அதே போல், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26,320 வாக்குகளும் பெற்றார். இதன் மூலமாக மம்தா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளார் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அமோகமாக வெற்றி பெற்றுள்ளார்.
மம்தா பானர்ஜி வெற்றி பெற்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன், தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா, “இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி” கூறினார்.
“பவானிபூர் தொகுதியில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன் என்றும், தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளேன்” என்றும், தனது வெற்றியைப் பற்றி அவர் புள்ளி விபரங்களாகக் கூறினார்.
மேலும், “நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதிவேலை” என்றும், மிக பகிரங்கமாக மம்தா குற்றம்சாட்டினார்.
“வங்கத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து, மத்திய அரசு எங்களை அதிகாரத்தில் இருந்து அகற்ற, பல சதித் திட்டங்களைத் தீட்டியது என்றும், நான் தேர்தலில் போட்டியிடாத படி என் காலில் காயம் ஏற்பட்டது” என்றும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், “எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” மம்தா கூறினார்.
இதனிடையே, ஏற்கனவே மம்தா பானர்ஜி 2 முறை பவானிபூர் தொகுதியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தற்போது அவர் இந்த தொகுதியில் 3 வது முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.