“உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருவதாக கூறி இந்தியாவில் பண மோசடி! கொடுமை..
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக கூறி, இந்தியாவில் உள்ள அவர்களுடைய பெற்றோர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் ஒன்று செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் - ரஷியா போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், ரஷியாவின் தாக்குதல் காரணமாக, உக்ரைனில் அப்பாவி பொது மக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால், உக்ரைனில் தங்கி படித்து வரும் பல நூறு இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, அங்குள்ள மறைவான பகுதிகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
அத்துடன், உக்ரைன் - ரஷியா இடையே ஏற்பட்டுள்ள இந்த போரால், பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்றனர்.
இதற்காக, இந்திய அரசும் பலவிதமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மேலும், உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வர அங்குள்ள ருமேனியா, போலந்து வழியாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இதற்காக 2 ஏர் இந்தியா விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள இந்தியவர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசின் நடவடிக்கை ஒரு புறம் இருக்கும் நிலையில், “உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அழைத்து வருவதாக” கூறி, அவர்களுடைய பெற்றோர்களை ஏமாற்றி இந்தியாவில் சில கும்பல் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது.
அதன்படி, இணையதளம் மூலமாக இது போன்று ஒரு மோசடி செய்து பணம் பறித்தக்கொண்ட ஒரு மோசடி நபரை மத்தியப் பிரதேச போலீசார், தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
அந்த வகையில், கைது செய்யப்பட்டுள்ள அந்த மோசடி நபர், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி அவரிடமிருந்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
அதாவது, மத்தியப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த வைசாலி என்ற பெண்ணின் மகள், உக்ரைனில் படித்து வருகிறார்.
அங்கு, ரஷியா - உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், அந்த அங்கு சிக்கித் தவிக்கும் தனது மகளை மீட்டு தருவதற்காக, இந்தியாவில் உள்ள அந்தமாணவியின் தாயாரிடம் ஒருவர் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.
முன்னதாக, அந்த பெண் மாநில மத்திய அரசுகளை தொடர்பு கொண்டு, தனது மகளை பத்திரமாக மீட்க உதவும் படி கேட்டுக்கொண்டார்.
இந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த மோசடி கும்பல், சம்மந்தப்பட்ட அந்த பெண்ணிடம் எப்படியோ மோசடியாக பேசி, அவரிடம் இருந்து 37 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்து உள்ளனர்.
இந்த மோசடி செய்த நபர், இணையதளத்தில் தன்னை பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் பி.ஏ வாக, சம்மந்தப்பட்ட பெண்ணிடம் அறிமுகமாகி இருக்கிறார்.
அதன் பிறகு, “42 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும், அந்த பணத்தில் தான் உங்கள் மகளுக்கு விமான டிக்கெட் எடுக்க வேண்டும்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்ட அந்த பெண், “தனது மகள் எப்படியாவது இந்தியா வந்தால் போதும்” என்கிற எண்ணத்தில், அவர் கேட்ட மாதிரயான பணத்தை கொடுத்து உள்ளார்.
இதனையடுத்து, பணத்தை பெற்றுக்கொண்ட நபர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால், பயந்து போன அந்த பெண், பல முறை குறிப்பிட்ட அந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால், அந்த போன் நம்பர் உபயோகத்தில் இல்லை என்று வந்திருகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், சம்மந்தப்பட்ட குற்றவாளியை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த விசயத்தை கேள்விப்பட்ட மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் பிரபுராம் சவுத்ரி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சென்று, “உங்கள் மகளை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வர அரசு துணை நிற்கும்” என்றும், அவர் உறுதி அளித்திருக்கிறார்.
முக்கியமாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் பாதிக்கப்பட்ட பெண்ணான வைசாலியை தொடர்பு கொண்டு, அவருடைய மகளை மீட்டுக்கொண்டு வருவோம்” என்றும், உறுதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.