“நான் பிரதமரானதும் முதல் உத்தரவு.. பெண்களுக்கு இடஒதுக்கீடு!” ராகுல் காந்தி பளிச்..
“நான் பிரதமரானதும் முதலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை பிறப்பிப்பேன்” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு ஊரில் உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரச்சாரத்திற்கு சென்றனர். அப்போது, அது பேசும் பொருளாக மாறியிருந்தது.
இந்த சூழலில் தான், தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட அந்த பள்ளியை சேர்ந்த சில மாணவர்களை அழைத்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் விருந்து அளித்தனர்.
இந்த தீபாவளி விருந்து தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டிருந்தார். அந்த பதில், “கன்னியாகுமரி முளகுமூடு செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நண்பர்களுடன் உரையாடல் மற்றும் இரவு உணவு” என்று, குறிப்பிட்டு இருந்தார்.
அத்துடன், “அவர்களின் வருகை தீபாவளியை மேலும் சிறப்படைய செய்தது. கலாச்சாரங்களின் சங்கமம் நமது நாட்டின் மிகப்பெரிய பலம். அதை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றும், அந்த புகைப்படத்துடன், ராகுல் காந்தி பதிவிட்டு இருந்தார்.
இவற்றுடன், மாணவர்களுடன் சாப்பிட்டுக்கொண்டே உரையாடும் வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி, தனது டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
கிட்டதட்ட ஒரு நிமிடம் ஒடுக்கூடிய அந்த வீடியோவில், ராகுல் காந்தியுடன் சேர்ந்து சாப்பிடும் விருந்தினர் ஒருவர், ராகுல் காந்தியிடம், “நீங்கள் பிரதமரானவுடன் வெளியிடும் முதல் அரசாங்க உத்தரவு எதுவாக இருக்கும்?” என்று கேள்வி கேட்டார்.
அதற்கு, பதில் அளித்த ராகுல் காந்தி, “பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவேன்” என்று, கூறினார்.
மேலும், “உங்கள் குழந்தைக்கு நீங்கள் என்ன கற்பிப்பீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்டால், ஒரு விஷயம் நான் பணிவு என்று கூறுவேன். ஏனென்றால், பணிவுடன் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்றும், அதற்கு ராகுல் காந்தி விளக்கமும் அளித்தார்.
முன்னதாக, அதற்கு முந்தைய டிவிட்டர் பதிவில், “10 லட்சம் குடும்பங்கள் கேஸ் அடுப்பிலிருந்து விறகு அடுப்பிற்கு மாறிவிட்டார்கள் என்றும், இந்தியாவின் வளர்ச்சி மிக தொலைவில் இருப்பதை இது காட்டுகிறது” என்றும், ராகுல் குறிப்பிட்டு உள்ளார்.
குறிப்பாக, “மோடியின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் பின்னோக்கி செல்கிறது என்றும், பிரேக்கும் வேலை செய்யவில்லை” என்றும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நக்கலாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.