கோமாவில் இருக்கிறாரா பிரணாப் முகர்ஜி? தற்போதைய நிலை என்ன! - முழு விவரங்கள்
By Nivetha | Galatta | Aug 13, 2020, 01:36 pm
மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி. அங்கு அவருக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச வசதியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. மற்றொரு பக்கம் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிலைமை தொடர்ந்து மோசமாக இருப்பதாக, மருத்துவமனை சார்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.
அப்படியான சூழலில், இன்று காலையில் இருந்து ட்விட்டரில் #ripPranabMukherjee என் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இதனால் பிரணாப் முகர்ஜி உடல்நலம் குறித்த செய்திகள் பரவத் தொடங்கியது.
இதனிடையே, பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தனது தந்தையின் உடலல்நிலை குறித்து, இன்று காலை முதல் சில பிரபலங்கள் உள்ளிட்டோரும் தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிகிறார்கள் என்றும் பிரணாப் உயிரோடு உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து, அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்து அறிந்திருந்திருக்கிறார்.அப்போது, பிரணாப் முகர்ஜி அவர்கள் விரைந்து நலம்பெற வேண்டும் என்றும், மருத்துவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் மீது, தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் ரெபரல் மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில் ``பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை இன்று காலையிலும், அதே மாதிரி மாறாமல் உள்ளது. அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், கோமா நிலையில் இருப்பதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.
84 வயதாகும் பிரணாப் முகர்ஜி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பதவிகாலத்தில் 2012ம் ஆண்டு முதல் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் ஆகும். மேற்கு வங்கத்தை சேர்ந்தவரான, பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர்.
1969ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜி அரசியலில் காலடி எடுத்து வைத்தார். தேர்தல் அரசியலை துவக்கிய பிரணாப் முகர்ஜியின் திறமைகளை பார்த்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரை காங்கிரசுக்கு வரவேற்று இணைத்துக்கொண்டார். 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பி ஆனார் பிரணாப் முகர்ஜி. பிறகு, 1975, 1981, 1993 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் ராஜ்யசபாவுக்கு மறுபடியும் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1973 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜிக்கு தொழில்துறை மேம்பாட்டுத் துறை, இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன்பிறகு மத்திய அமைச்சரவையில் பல்வேறு துறைகளை வகித்தவர் பிரணாப் முகர்ஜி.
2012 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், காங்கிரசிலிருந்து விலகியதோடு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டியதாயிற்று. அதன்பிறகு பிரணாப் முகர்ஜி தீவிர அரசியலில் இருந்து விலகி தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறுகையில், ``கடந்த வருடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி பாரத ரத்னா விருது வாங்கினார் பிரணாப் முகர்ஜி. அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் ஒருவருடம் கழித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எது நல்லதோ அதை கடவுள் செய்து கொள்ளட்டும்" என்று தெரிவித்துள்ளார்.