``தோனி - புதிய இந்தியாவின் அடையாளம்!" பிரதமர் மோடி புகழாரம்
By Nivetha | Galatta | Aug 20, 2020, 04:31 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். திடீரென வெளியான அந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தோனியின் இந்த முடிவு குறித்து பல்வேறு விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனியை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
``சிறிய நகரத்தில் பிறந்து தேசிய அடையாளமாக மாறியவர், தோனி. வெற்றியோ தோல்வியோ எந்த நேரத்திலும் அமைதியை கடைப்பிடித்து சிறந்து விளங்குபவர் அவர். கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார். மேலும் 2011 உலக கோப்பையை வென்று கொடுத்த தருணம் இந்திய மக்களால் என்றும் மறுக்கப்படாது. இறுதி போட்டியில் சிக்சர் விளாசி உலகக் கோப்பையை வென்று தந்த தருணம் இந்தியர்களின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும். சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்ற தகவலை கேட்டதும் ஏமாற்றம் அடைந்தேன்.
ராணுவத்தின் கௌரவ பதவியில் பணியாற்றியபோது தோனி மகிழ்ச்சிகரமாக இருந்தார். தோனி... தங்களின் ஓய்வு 130 கோடி இந்திய மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. தங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துக்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான நீங்கள், புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் நீங்கள். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு தோனியை எப்போதுமே பெருமைப்படுத்தும்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் கூறியவர், ``வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமே தோனியை சுருக்கிவிட முடியாது, பல கோடி இளைஞர்களுக்கு தோனி உத்வேகம். இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் தோனி.
சக வீரர்கள் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தபோது தோனி தனது குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த புகைப்படம் என் மனம் கவர்ந்தது" என கூறியிருக்கிறார்.
பிரதமர் எழுதிய கடிதத்தை டோனி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தோனி, சரியாக கடந்த ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார். அப்போது முதலே அவர் பாஜக கட்சியில் சேரப் போவதாக வதந்திகள் வலம் வந்தன. அதைத் தொடர்ந்து `தோனி - பாஜக இடையே என்ன நடக்கிறது?' என்ற விவாதங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தோனி வழக்கம் போல அமைதியாக இருக்கிறார். எனினும், பாஜகவில் இருந்து தோனியை அரசியலுக்கு வருமாறு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழைப்பு விடுத்து வருவதை சுட்டிக் காட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பாஜக இடையில் தொடர்பு இருப்பதாக பேச்சுக்கள் வலம் வரக் காரணம் 2019 மக்களவை தேர்தல் தான். காரணம், அப்போது பாஜக தலைவர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது தோனியை சந்தித்து பேசினார். அப்போதே தோனி விரைவில் பாஜகவில் இணைவார் என்ற பேச்சு வலம் வந்தது. குறிப்பாக 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இணைவார் என்றார்கள். ``ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதன் பின் நடந்த ஜார்கண்ட் மாநில தேர்தலில் தோனி பாஜக சார்பாக பிரச்சாரம் செய்வார், போட்டியிடுவார் என்றெல்லாம் கட்டுக் கதைகள் கிளம்பின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மட்டுமன்றி, அந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தோனி ஓய்வை அறிவித்த பின்னர் பாஜகவில் இருந்து தோனிக்கு அழைப்புகள், சமிஞ்ஞைகள் வரத் துவங்கின. அரசியலில் பல உள்விவகாரங்களை அறிந்தவரும், பாஜக எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி 2024 மக்களவை தேர்தலில் தோனி களமிறங்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.