`நேர்மையாக வரி செலுத்துவோருக்காக...' - மோடி சொல்பவை என்ன?
By Madhalai Aron | Galatta | Aug 13, 2020, 03:22 pm
நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக, ‘வெளிப்படையான வரி விதிப்பு- நோ்மையானவரை கௌரவித்தல்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், பல்வேறு வா்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள், பட்டயக் கணக்காளா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள், வரி செலுத்திய பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மத்திய அரசு, நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
``கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி விதிப்பில் பல்வேறு முக்கிய சீா்திருத்தங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிடிபிடி) கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, பெரு நிறுவனங்களின் வரி கடந்த ஆண்டு 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகளுக்கான வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பகிா்ந்தளிக்கப்படும் ஈவுத்தொகை மீது வரி விதிப்பதும் ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, வருமான வரி செலுத்தும் விண்ணப்பங்கள் எளிமையாக வடிவமைக்கப்பட்டன. வரி செலுத்தும் முறையிலும் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டது. மேலும், கரோனா தொற்று காலத்தில் வரிக்கணக்கு செலுத்துவதற்கான அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நோ்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்படுகிறது" என்று கூறப்பட்டிருந்தது.
இன்று திட்டமிட்டபடி, கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி பேசும்போது
``நேர்மையாக வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். டிஜிட்டல் வரி மதிப்பீட்டு முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் மேல்முறையீட்டு முறை செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். வரி செலுத்தாதவர்களிடம் வரியை வசூலிப்பதும், பாதுகாப்பில்லாதவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுமே நமது நோக்கம். வரி முறையை எளிமையாக்குவதே நமது முயற்சி.
வரி செலுத்துவோருக்கான சாசனம் நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெரிய படி. சட்டங்களையும், கொள்கைகளையும் மக்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதுதான் நமது புதிய ஆட்சிமுறை. இதன் பயன்களை தற்போது நாடே அனுபவித்து வருகிறது
மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்று சேருகின்றன. உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று சொன்னார் மோடி. நேர்மையாளரை பெருமைப்படுத்தும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று கூறிய மோடி நியாயமான மற்றும் எளிமையான வரி விதிப்பு என்பது நமது முக்கிய கொள்கையாக உள்ளது.
சட்டமும், கொள்கைகளும் மக்களை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும். வரிமுறையை எளிமைப்படுத்துவதன் மூலம் அதிக அளவில் வரி செலுத்துவோரை ஊக்குவிக்க முடியும். நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கிய பங்கு உள்ளது. வரி செலுத்தும் முறை மிக எளிமையாக இருக்க வேண்டும். நேர்மையாக வரி செலுத்துவோர் நாட்டின் வரி வசூலிப்பு முறை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்" என்று பேசியுள்ளார்.
இந்த புதிய திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது, “வரிமுறையை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றி, வரி செலுத்துவோரை கவுரவிப்பதே பிரதமர் மோடியின் திட்டம். இதற்காக, மத்திய நேரடி வரிகள் வாரிய புதிய செயல்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.