சமூகத்தில் ஆதரவற்ற, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு குடும்பப் பாதுகாப்பை அமைத்துத்தருவதே தத்தெடுத்தலின் நோக்கம். இதற்காகவே செயல்படுகின்றன, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் `மத்திய தத்துவள ஆதாரமையம்' (CARA), மற்றும் அனைத்து மாநிலங்களும் இயங்கும் 'மாநில தத்துவள ஆதாரமையம்' (SARA) ஆகியன. தமிழகத்தில், சமூக நலத்துறையின் ஆணையர் தலைமையில் 'தத்துவள மையம்' செயல்படுகிறது. 

 

தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் திருமண பந்தத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். 0-4 வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்க, பெற்றோரின் கூட்டு வயது அதிகபட்சமாக 90-ஆக இருத்தல் அவசியம். இதில் தனிநபர் வயது 25-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்கவேண்டும். 4-8 வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க, பெற்றோரின் கூட்டு வயது 100-க்குள் இருக்கவேண்டும். இதில் தனிநபர் வயது 25-க்குக் குறையாமலும் 55-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தத்தெடுப்பவர் தனிநபராக இருக்கும் பட்சத்தில் தாய் அல்லது தந்தையின் வயது 30-க்கு குறையாமலும் 50-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். திருமணமாகாதவர்/தனிநபராக (விவாகரத்து பெற்றவர்) இருக்கும் ஆண், பெண் குழந்தையைத் தத்தெடுக்க முடியாது.

 

கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில் 2,061 பெண் குழந்தைகள் உள்பட 3,531 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. மாநிலங்கள் அளவில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.

 

இதுகுறித்து குழந்தைகள் தத்தெடுப்பு ஆதார ஆணையம் வெளியிட்டுள்ள விவரம்: 2019, ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த மார்ச் வரையிலான ஓராண்டில் 5 வயது வரையிலான 3,120 குழந்தைகளும், 5 முதல் 18 வயது வரையிலான 411 குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2,061 பெண் குழந்தைகளும், 1,470 ஆண் குழந்தைகளும் அடங்குவர். மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டித்தில் அதிகபட்சமாக 615 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக கர்நாடகத்தில் 272, தமிழ்நாட்டில் 271, உத்தரபிரதேசத்தில் 261, ஒடிஸாவில் 251 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

மகாராஷ்டிரத்தில் 60-க்கும் மேற்பட்ட தத்தெடுப்பு மையங்கள் உள்ளதால் அங்கு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் சராசரியாக 20 தத்தெடுப்பு மையங்கள் செயல்படுகின்றன. 2018-19-இல் 3,745 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட நிலையில், 2019-20-இல் அந்த எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளது.

 

"நாட்டில் ஆண் குழந்தைகளுக்குதான் முன்னுரிமை என்கிற பரவலான கருத்து இருக்கும் நிலையில், தத்தெடுப்பில் பெண் குழந்தைகளே முன்னிலையில் உள்ளனர். மக்களின் மனநிலை மெதுவாக மாறிவருகிறது. பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்' என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

"குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புவோருக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கிறோம். ஒரு பெண் குழந்தை, ஓர் ஆண் குழந்தை அல்லது இருவரில் ஒருவரை தத்தெடுக்கலாம் என விண்ணப்பத்தில் கேட்கப்படுகிறது. பெரும்பாலானோர் பெண் குழந்தையைத் தேர்வு செய்கின்றனர்' என அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளையில், தத்தெடுப்பதற்கு பெண் குழந்தைகளே அதிகமாக உள்ளதால் அவர்களது எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அதேபோல் சிறிது வயது அதிகமான குழந்தைகளைவிட இளவயது குழந்தைகளையே தத்தெடுக்க மக்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் எனவும் இந்தப் புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

 

மேற்கண்ட தகவல்கள் ஆதரவற்ற, கைவிடப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுப்பது தொடர்பானது. உறவினர்களிடமிருந்து குழந்தைகளைத் தத்தெடுப்பதோ, வளர்ப்புக் குழந்தைகளைத் தத்தெடுப்பதோ இதில் சேர்க்கப்படவில்லை.