நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்குகிறது. உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கடந்த ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. இரு அவைகள் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதே நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மாதம் பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இறுதியில் அந்த விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். பிப்ரவரி 11-ம் தேதியுடன் முதல் பகுதி கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று தொடங்குகிறது. கொரோனா 3-வது அலை காரணமாக முதல் பகுதியில் மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனி நேரத்தில் நடந்தது. ஆனால், இப்போது கொரோனா பரவல் தணிந்து விட்டதால், இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டமும் தொடங்குகிறது.
பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதும், காஷ்மீருக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதும் இத்தொடரில் மத்திய அரசின் முக்கிய செயல் திட்டங்கள் ஆகும். காஷ்மீருக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்கிறார். இன்று மாலையே அந்த பட்ஜெட் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அரசியல் சட்ட திருத்த எஸ்.டி.மசோதாவும் அவையின் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
மேலும் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான 4 நாட்களில் நாடாளுமன்றம் கூடுகிறது. 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ரஷியா-உக்ரைன் போரால் பரபரப்பான சூழல் நிலவுகையில் இந்த தொடர் தொடங்குகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தாமதம் செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
அதனைத்தொடர்ந்து சமீபத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி குறைக்கப்பட்டதும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது குறித்து அவையில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என்றும் தெரிகிறது. மேலும் உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இல்லத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில், நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. உக்ரைன் மீட்பு விவகாரம், பணவீக்க உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வைப்புநிதி வட்டி குறைப்பு, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஆகிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு செய்யப்பட்டதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். எனவே, இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவையில் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி ஹர்தீப் சிங் பூரி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் விலை உயர்த்திய போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலையை ஏற்றவில்லை என்று தெரிவித்தார். மேலும் பிற நாடுகள் பெட்ரோல் விலையை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்திய போதும், இந்தியாவில் 5 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.