கொரோனா உயிரிழப்பு மற்றும் காற்று மாசு குறித்து இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக குற்றம் சாட்டினார். 

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. அதிபர், டொனால்டு டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டி யிடுகிறார்.ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், அதிபர் வேட்பாளர்கள் இடையேயான முதல் நேரடி விவாதம், ஓஹியோ மாகாணம், கிளீவ்லாண்டில் நடந்தது.

அப்போது, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், ‛கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியாகச் செயல்படவில்லை. அதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது,' என்றும், ‛உலக வெப்பமயமாதலுக்கு அமெரிக்கா 15 சதவீதம் பொறுப்பு' எனவும் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ‛சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனா உயிரிழப்புகள் குறித்த உண்மையான தரவுகளை அளிக்கவில்லை. அமெரிக்காவை விட இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தான் உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம்,' என கூறியிருந்தார்.

டிரம்பின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பியது. 

இந்தியாவை நட்பு நாடு என்று கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரச்சாரத்தின்போது புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என்று குற்றம் சாட்டியிருப்பது, மிகப்பெரிய முரணாக பார்க்கப்படுகிறது. இதேபோல் சீனா, ரஷியா ஆகிய நாடுகளும் காற்றில் மாசுக்களை பறக்க விடுவதாக ட்ரம்ப் கூறியிருந்தார். 

ட்ரம்ப்பின் இந்த வாதத்துக்கு, இந்திய அரசு சார்பில் எதுவும் பதில் கூறப்படவில்லை. ட்ரம்ப் இந்தியா குறித்து பேசியது பற்றியும், இந்திய அரசு மௌனம் காப்பது குறித்தும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் விமர்சனம் வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

``47 ஆண்டுகளில் நீங்கள் செய்ததை விட 47 மாதங்களில் நான் செய்துள்ளேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் நேரடி விவாதத்தின்போது டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். இந்த அறிக்கை இந்தியாவில் உள்ள ஒருவரை உங்களுக்கு நினைவூட்டினால், அது உங்கள் கற்பனை!

கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக இந்தியா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் மீது டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். அதிக அளவில் காற்று மாசுக்கு இந்த நாடுகள் காரணம் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.

இந்த சூழ்நிலையில், மோடி அவர்கள் தனது உற்ற நண்பரை கவுரவிப்பதற்காக இன்னொரு ‘நமஸ்தே டிரம்ப்!’ நிகழ்ச்சியை நடத்துவாரா?"

இவ்வாறு ப.சிதம்பரம் கூறி விமர்சித்துள்ளார்.