“புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்” பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்
By Aruvi | Galatta | May 13, 2021, 10:30 am
“புதிய நாடாளுமன்ற கட்டிடமான சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்” என்று, பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 அலை மிகப் பெரிய அளவில் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால், கொரோனா நாடு முழுவதும் ஏற்படுத்தும் விளைவுகள் மிகப் பெரிய அளவில் யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் இருந்து வருகிறது.
அத்துடன், நாட்டிலேயே வட மாநிலங்களில் மிக அதிகப்படியான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் உயிருக்காகப் போராடி வருகின்றனர். இந்தியாவின் இந்த இக்காட்டான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, உலக நாடுகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மத்திய - மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து பல்வேறு உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா தவித்து வரும் நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இவற்றுடன், பிரதமருக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சொகுசு பங்களா கட்டுவதும் தற்போது நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகி, அது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முக்கியமாக, டெல்லியில் பிரதமரின் புதிய இல்லமானது 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டுப்பட்டு வருவதற்கு, முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முதல் நடிகர் பிரகாஷ் ராஜ் வரை, மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இதற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களால் பதில் சொல்ல முடியாமல் இருந்து வருகின்றனர்.
இப்படியாக, இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாகப் பரவி வரும் இந்த நிலையில் மத்திய அரசு, சென்ட்ரல் விஸ்தா கட்டுமான பணியை முடுக்கிவிட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில், “பல்வேறு துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவைக் காணொலி காட்சி மூலம் கூட்ட வேண்டும் என்றும், சென்ட்ரல் விஸ்தா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றும், வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
அத்துடன், “புதிய நாடாளுமன்ற கட்ட ஒதுக்கிய நிதியைக்கொண்டு கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளுக்கு ஒதுக்க வேண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
“நாடு முழுவதும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தும் வகையில், மையங்கள் அமைக்க வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தடுப்பூசி வாங்குவதில் நாடு முழுவதும் ஒரே விலையைப் பின்பற்ற வேண்டும்” என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
“ஆக்ஸிஜன், கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு பி.எம்.கேர்ஸ் போன்றவற்றிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றும், இந்தியாவின் ஒட்டுமொத்த எதிர் கட்சியினரும் ஒன்று சேர்ந்து, ஒரே குரலாகப் பிரதமர் மோடியிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.