“பூஜ்ஜிய பட்ஜெட்” எதிர் கட்சிகள் கடும் தாக்கு!
“மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் பூஜ்ஜிய பட்ஜெட்” என்று, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர் கட்சிகள் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2022 -23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக, எதிர் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதன்படி, எதிர்கட்சித் தலைவர்கள் யார் யார் என்னென்ன கருத்துக்களை விமர்சனங்களாக கூறி உள்ளனர் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி
“மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட் சம்பளம் பெறும் பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு இந்த பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை” என்று, மிக கடுமையாக சாடி உள்ளார்.
அத்துடன், “மோடி அரசின் ஜீரோ பட்ஜெட் இது” என்றும், ராகுல் காந்தி மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
மம்தா பானர்ஜி, முதலமைச்சர், மேற்கு வங்கம்
““வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் வேளையில், சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம் தான் உள்ளது” என்று, மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மேலும், “எதையுமே குறிக்காத பெரிய வார்த்தைகளில் அரசாங்கம் தோற்று விட்டது என்றும், இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்” என்றும், மம்தா பானர்ஜி தனது எதிர்மறையான விமர்சனத்தை பதிவிட்டு உள்ளார்.
சசி தரூர், காங்கிரஸ் எம்.பி
“இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை, இது ஒரு ஏமாற்றம் தரும் பட்ஜெட்” என்று கருத்து தெரிவித்து உள்ளார்.
அத்துடன், “மிகவும் ஏமாற்றம், ஒரு ஈரமான வான வேடிக்கை என்றும், இது ஒரு வியக்கத்தக்க ஏமாற்றம் தரும் பட்ஜெட்” என்றும், விமர்சித்து உள்ளார். “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு, பாதுகாப்புத்துறை, பொது மக்கள் எதிர்கொள்ளும் வேறு எந்த அவசர முன்னுரிமைகள் பற்றியும் இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், “நாம் பயங்கரமான பணவீக்கத்தை எதிர்கொள்ளும் சூழலில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி விலக்கு இல்லை என்றும், நல்ல நாட்கள் வருகின்றன என்ற மாயையை இன்னும் தொலைவில் தள்ளுவது போன்ற பட்ஜெட் இது உள்ளது” என்றும், விமர்சித்து உள்ளார். குறிப்பாக, “இந்தியாவுக்கு நல்ல நாட்கள் வருவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்” என்றும், சசி தரூர் மிக கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.
ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் பொதுச் செயலாளர், தலைமை செய்தித் தொடர்பாளர்
“சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு மத்திய பட்ஜெட் துரோகம் இழைப்பதாக” ரந்தீப் சுர்ஜேவாலா குற்றம்சாட்டி உள்ளார்.
“மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டின் சம்பளக்காரர்கள் என்றும், நடுத்தர வகுப்பினருக்கான எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் அவர்கள் துரோகம் இழைத்து உள்ளனர்” என்றும், குற்றம்சாட்டி உள்ளார்.
“ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்க சம்பளம் வாங்குவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார்.
“பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் தங்களது நடவடிக்கைள் மூலமாக மீண்டும் ஏமாற்றி உள்ளனர், இது இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்” என்றும், ரந்தீப் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.
திருமாவளவன், விசிக, எம்.பி
அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்ககூடிய வகையில் இன்றைய பட்ஜெட் உள்ளது” என்று, குற்றம்சாட்டி உள்ளார். அத்துடன், “நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்றும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது என்றும், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது” என்றும், திருமாவளவன் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக எம்.பி
“மாநில உரிமையில் அதிகம் கை வைத்து உள்ள பட்ஜெட் இது” என்று, டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்து உள்ளார். மேலும், “5 மாநில சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் ஏமாற்று வேலைகளை அறிவித்திருக்கிறார்கள்” என்றும், டி.கே.எஸ்.இளங்கோவன், விமர்சித்து உள்ளார்.
முத்தரசன், சிபிஐ, மாநிலச் செயலாளர்
“மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்த பட்ஜெட் என்றும், ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு மூலமாக எதிர் காலத்தில் மாநிலத்திற்கு கிடைக்கும் வருமானம் ஜீரோவாக்கப்படும்” என்றும், அவர் விமர்சித்து உள்ளார்.
கே.பாலகிருஷ்ணன், சிபிஎம், மாநில செயலாளர்
“நனைந்து போன வெடிக்காத பட்டாசு போல் இருக்கிறது இந்த பட்ஜெட்” என்று, கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்து உள்ளார்.