சாலையில் தீடிரென தீப்பற்றி எறிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. அதிர்ச்சியில் மக்கள்!
புனேவில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே நகரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில், புதிய கருநீல வண்ண ஸ்கூட்டர் ஒன்று நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிவது தெளிவாக பதிவாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் பற்றி ஓலா இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது பாதுகாப்பு தான் முதன்மையானது. இது குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் சரி செய்துவிடுவோம் என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் புனேயில் எங்களின் ஸ்கூட்டர் ஒன்றில் நடந்த சம்பவம் பற்றி எங்களுக்கு தெரிய வந்தது. இந்த விபத்துக்கான மூல காரணத்தைப் புரிந்து கொள்ள நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் புதிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரூ.499-க்கு முன்பதிவு செய்து ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெற்று செல்லுங்கள் என்று அறிவித்து அந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகன விற்பனையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பல ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் ஓலாவின் எஸ்-1 மற்றும் எஸ்-1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தரம் மற்றும் பேட்டரி வரம்பு குறித்தும் கவலை கொண்டுள்ளனர். ஓலா நிறுவன ஸ்கூட்டர்களில் இத்தகைய சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே போல் சம்பவம் நேற்று தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்த விபத்தில் சிக்கி தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். துரை வர்மா எலக்ட்ரானிக் பைக் மற்றும் பெட்ரோல் பைக் ஒன்றும் வைத்துள்ளார். எலக்ட்ரானிக் பைக் பேட்டரிக்கு இரவு நேரங்களில் சார்ஜ் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது வீடு மிகவும் குறுகிய அறைகளை கொண்டதாகும். இந்த வீட்டில் ஜன்னல்கள் எதுவுமில்லை. நேற்று இரவு பைக்குகளை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் துரை வர்மாவும் அவரது மகள் மோகன ப்ரீத்தியும் வீட்டில் இருந்தனர். இரவு எலக்ட்ரானிக் பைக் பேட்டரி சார்ஜ் போடுவதற்கு துரை வர்மா மின் இணைப்பு கொடுத்தார். பைக்கில் ஜார்ஜ் ஏறிக்கொண்டிருந்தது. இதனையடுத்து அவரும் அவரது மகளும் வீட்டில் உள்ள அறையில் படுத்து தூங்கிவிட்டனர். இந்நிலையில் தொடர்ந்து சார்ஜ் ஏறிக் கொண்டே இருந்ததால் எலக்ட்ரானிக் பைக் பேட்டரி அதிக அளவில் சூடானதாக தெரிகிறது. நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென எலக்ட்ரானிக் பைக் பேட்டரி வெடித்து சிதறியது மேலும் அவர்களது வீடே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனால் மூச்சுத்திணறி அப்பாவும் மகளும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.