போலீசார் பொதுமக்களை “வாடி போடி.. வா, போ” என்று மரியாதை குறைவாக நடத்தக்கூடாது” - நீதிமன்றம்
போலீசார் யாரும் பொது மக்களை “வாடி போடி, வா, போ” என்று மரியாதை குறைவாக நடத்தக்கூடாது என்று, நீதிமன்றம் கண்டித்து உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அடுத்து உள்ள சேர்தலா பகுதியைச் சேர்ந்த அணில் குமார் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “கடந்த இரு நாட்களுக்கு முன்பாக, 16 வயது மகளுடன் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன் என்றும், அப்போது வழி மறித்த சேர்தலா பகுதியைச் சேர்ந்த போலீசார் என்னிடம் விசாரணை என்ற பெயரில், என்னை மிகவும் அவமரியாதையாக என் மகளின் முன்னிலையில் பேசி அநாகரிகமான முறையில் நடந்துகொண்டனர்” என்றும், அவர் குறிப்பிட்டு இருந்தார்.
முக்கியமாக, “என மகள் என் அருகில் நிற்கும் போது, அவர் முன்பாகவே, “எடா... வா, போ” என்று, மிகவும் மரியாதைக் குறைவாக என்னை இழிவாகவும் பேசினார்கள்” என்றும், அவர் அந்த மனுவில் குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும், “பொது மக்களை போலீசார் இனியாவது கவுரவமாக நடத்த வேண்டும் என்று, போலீசாருக்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றும், அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், “போலீசார் பொது மக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாகப் புகார்கள் வருகின்றன” என்று, தனது கவலையைத் தெரிவித்தார்.
“எக்காரணம் கொண்டும் பொது மக்களை போலீசார் தரக்குறைவான வகையில் நடத்தக்கூடாது என்றும், கேரள உயர் நீதிமன்றம் போலீசாருக்கு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதே போல், “போலீசாரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல” என்றும், நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளது.
குறிப்பாக, “சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், பொது மக்களை அநாகரீகமாக நடத்துவதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும், நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
கேரள முழுவதும் போலீசார் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளை “வா, போ” என ஒருமையில் அழைத்துப் பேச கூடாது என்றும், “எடா, எடீ மற்றும் வாடி, போடி” என்பது போன்ற எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தி அழைக்கக்கூடாது என்றும், இது தொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றும், நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
அதே நேரத்தில், “இது தொடர்பாக நீதிமன்றத்தில் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும், காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.