ஒமிக்ரான் கண்டறியப்பட்டவருக்கு 'நெகட்டிவ்' சான்றிதழ்... விசாரணைக்கு உத்தரவிட்ட கர்நாடக அமைச்சர்!
தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த பயணிக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு அளித்த ஆய்வகம் மீது விசாரணை நடத்தப்படும் என கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுக்க 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகாரப்பூர்வமாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட நேரத்தில்தான் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. பெங்களூரில் மருத்துவர் ஒருவருக்கும், தென்னாப்பிரிக்க பயணி ஒருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் கடந்த வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
இதில் முதன்முதலில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த பயணி காரணமாக ஏற்பட்டது ஆகும். இவருக்கு ஒமிக்ரான் வந்ததே கொஞ்சம் விசித்திரமானதுதான்.
ஏனெனில் ஒமிக்ரான் பரவலுக்கு முன்பாகவே இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்று விதி கொண்டு வரப்பட்டுவிட்டது. அதன்படி தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த அந்த பயணிக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் இருந்துள்ளது.
இந்த பயணி துபாய் வழியாக இந்தியாவிற்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி அந்த 66 வயது கொண்ட தென்னாபிரிக்கா பயணி பெங்களூரில் தரையிறங்கி இருக்கிறார். அவரிடம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்துள்ளது.
இதனால் பெங்களூருக்குள் அனுமதிக்கப்பட்டவரின் ஹோட்டல் விலாசம் வாங்கப்பட்டுள்ளது. இவரின் கொரோனா தொற்றுக்கான மாதிரிகள் விமானநிலையத்திலேயே வாங்கப்பட்டுள்ளது. அன்று இரவே அந்த தென்னாப்பிரிக்க பயணியின் கொரோனா சோதனை முடிவுகள் பாசிட்டிவ் என்று வந்துள்ளது.
ஆனால் அவர் அறிகுறி இல்லாத நோயாளி என்பதால் அதே ஹோட்டலில் தனிமைப்படுத்தும்படி பெங்களூர் மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக அவர் அங்கேயே இருந்துள்ளார். இதில் 22 ஆம் தேதி தனியார் கொரோனா ஆய்வக மையத்தில் அவர் சோதனை செய்தநிலையில், 23 ஆம் தேதி நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது.
இதை மாநகராட்சி அதிகாரிகளிடம் காண்பித்து தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறியவர், மறுநாளே தென்னாப்பிரிக்க பயணி துபாய் சென்றுவிட்டார். இந்நிலையில்தான் தென்னாப்பிரிக்கா பயணியின் கொரோனா மாதிரியை மரபியல் ரீதியான ஜீன் சோதனைக்கு அனுப்பிய நிலையில் அதன் முடிவு வந்தது.
அதில்தான் அந்த தென்னாப்பிரிக்கா பயணிக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 3 கேள்விகள்தான் அதிகாரிகளை குழப்பி உள்ளது. ஒமிக்ரான் பாதித்த தென்னாப்பிரிக்க பயணி துபாயில் இருந்து வரும் போது நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தது எப்படி? அது பொய்யான சான்றிதழா? துபாய் சோதனையில் இவருக்கு ஒமிக்ரான் கண்டறியப்படவில்லையா?
அதோடு 20 ஆம் தேதி பாசிட்டிவ் என்று வந்தவருக்கு, 23 ஆம் தேதியே நெகட்டிவ் என்று வந்தது எப்படி? தனியார் நிறுவனத்தில் மீண்டும் சோதனை செய்ததில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லையா? அப்படி என்றால் சமயங்களில் பரிசோதனையில் இருந்து ஒமிக்ரான் தப்பிக்கிறதா? ஆகிய 3 கேள்விகள் எழுந்துள்ளன.
தென்னாப்பிரிக்க பயணி ஒமிக்ரான் கொரோனாவை வைத்துக்கொண்டு அதிகாரிகளை ஏமாற்றி இருக்கிறாரா என்ற அச்சமும் எழுந்துள்ளது. இருப்பினும் அவர் இப்போது துபாய் சென்றுவிட்டதால் இனி துபாய் அதிகாரிகள்தான் அவரை கண்காணிக்க வேண்டும்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா அமைச்சர் அசோகா, “ஒமிக்ரான் பாதிப்புடன் துபாய் புறப்பட்டு சென்ற நபரிடம் முன்கூட்டியே நடத்தப்பட்ட பரிசோதனையில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இருவேறு முடிவுகள் வந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு நெகட்டிவ் என சான்றிதழ் கொடுத்த ஆய்வகத்தின் மீதுமுறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடத்தப்படும்” இவ்வாறு கர்நாடக மாநில அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்.