நீரவ் மோடி கூட்டாளி சுபாஷ் கைது.. மும்பை அழைத்து வந்த சிபிஐ!
வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் கூட்டாளியான சுபாஷ் சங்கரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து மும்பை அழைத்து வந்துள்ளனர்.
இந்தியாவில் பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நீரவ் மோடி. நாடு முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைக்கடைகள் இருந்தன. இந்த நிலையில் நீரவ் மோடியும் அவரது மாமா மெகுல் சோக்சியும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடினர். அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தால் பொருளாதார குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தப்பியோடிய அவர்கள் இருவர் மீதும் பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லண்டனில் தஞ்சமடைந்துள்ள நீரவ் மோடியையும், மெகுல் கோக்சியையும் இந்தியா கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் நீரவ் மோடியின் சொத்துக்களையும் ஏலம் விட்டு அந்தப்பணம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது நீரவ் மோடியின் நெருங்கிய கூட்டாளியான சுபாஷ் சங்கர் எகிப்தில் இருப்பதை அறிந்து, சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து விசாரணையில் நீரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ் சங்கர் தான் மேற்கொண்டார் எனவும், அவரது வைர நிறுவனங்களில் துணை பொது மேலாளராக சுபாஷ் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மும்பை அழைத்து வரப்பட்டதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும், பின்னர் சி.பி.ஐ சுபாஷை நீதிமன்றக் காவலில் எடுத்து மேற்கொண்டு விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.