பாஜகவின் அடுத்த தமிழ் மாநில தலைவர் யார் என்பதில், நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை இடையே கடும் போட்டி நிலவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், நேற்றைய தினம் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு, மீன்வளத் துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அதே போல், எல். முருகனுக்கு முன்பாக தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக தான், எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், எல். முருகன் தலைமையில் தான், அதிமுக கூட்டணியில் பாஜக களம் கண்டு, இது வரை இல்லாத வகையில், 4 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டமன்றத்தை அலங்கரித்தது.
ஆனால், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தோல்வி அடைந்தார். ஆனாலும், தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக தமிழக சட்டப்பேரவைக்குள் தற்போது நுழைந்துள்ளது.
இப்படியாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பதால், அதற்கு பரிசாகத்தான் எல். முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இந்த நிலையில், எல்.முருகன் அமைச்சராகிவிட்டதால், தமிழ் மாநிலத் தலைவர் பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால், “தமிழகத்தின் அடுத்த பாஜக மாநிலத் தலைவர் யார்?” என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
இந்த சூழ்நிலையில், “பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவராக யாரை நியமிக்கலாம்? என்று, அக்கட்சியின் டெல்லி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக அறிவிக்கப்படலாம் என்ற ஒரு புதிய தகவலும் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
அத்துடன், பாஜக டெல்லி மேலிடம் தீவிரமாக ஆலோசித்த மாநிலத் தலைவர்கள் தேர்வு பட்டியலில், நயினார் நாகேந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது என்றும், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனால், அண்ணாமலை அல்லது நயினார் நாகேந்திரன் இருவரில் ஒருவரை தான், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தமிழக பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இதில், நயினார் நாகேந்திரன் அதிக அரசியல் அனுபவம் உள்ளவராகத் திகழ்வதுடன், தென் மாவட்டங்களில் அரசியல் செல்வாக்கு உள்ளவராகவும் திகழ்கிறார். இதன் காரணமாக, இவரே பாஜக தமிழ் மாநிலத் தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாகவே, நயினார் நாகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி விசிட் அமைந்திருந்தது என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற 4 பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
குறிப்பாக, மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து உடனடியாக ஊர் திரும்பி விட்ட நிலையில், நயினார் நாகேந்திரன் மட்டும் தனது மகனுடன் டெல்லியிலேயே முகாமிட்டு பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து வந்தார்.
இதனால், இந்த சந்திப்புகள் அனைத்தும் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. அதுவும், பாஜக தமிழ் மாநிலத் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான சந்திப்பாக இது அமைந்துள்ளதாகவும், தற்போது பேசப்படுகிறது.
அதே நேரத்தில், அண்ணாமலையை மாநிலத் தலைவராக நியமித்து தமிழ்நாட்டில் அதிகளவு இளைஞர்களை பாஜகவில் சேர்க்கத் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இதனால், “பாஜகவின் அடுத்த தமிழ் மாநில தலைவர் யார்?” என்பதில், நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை இடையே கடும் போட்டி நிலவத் தொடங்கி உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.