“எங்களுக்கு வேறு தொழில் இல்லை.. அடிச்சோம்.. செத்ததே தெரியாது” மாட்டிக்கொண்ட 3 திருநங்கைகள்!
By Aruvi | Galatta | Aug 19, 2020, 08:18 pm
“எங்களுக்கு வேறு தொழில் இல்லை.. கொலை செய்ய நினைக்கல, அடிச்சோம் ஆனா செத்ததே தெரியாது” என்று, கர்நாடகா மாநிலத்தில் 3 திருநங்கைகள் வாக்கு மூலம் அளித்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமநகர் மாவட்டம் டவுன் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரா என்பவர், பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
மாலையில் பணி முடிந்த பிறகு அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்திற்குச் சென்று திருநங்கையைப் போல், வேசம் போட்டு, அந்த பகுதியில் செல்லும் வாகனங்களை வழி மறித்து, பணம் கேட்டு வந்துள்ளார்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள பெங்களூரு நைஸ் ரோட்டில் நின்று வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் கேட்டு வந்துள்ளார். அதே நேரத்தில், அந்த பகுதியில் தேவி, பாவனா, நித்யா ஆகிய 3 திருநங்கைகளும், வழக்கமாக அதே பகுதியில் நின்று பணம் கேட்டு வருவது வழக்கம்.
இப்படிப்பட்ட சூழல் நிலையில், திருநங்கை வேசத்தில் பொதுமக்களிடம் பணம் வாங்கி வந்த ராஜேந்திராவை, அந்த 3 திருநங்கைகளும் பார்த்து உள்ளனர். “அவரும் நம்மைப் போன்று திருநங்கை தானே, பணம் வாங்கட்டும்” என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளனர். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அந்த 3 திருநங்கைகளுக்கும் வருமானமும் குறையத் தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக, புதிதாக வந்து பணம் கேட்கும் ராஜேந்திராவின் நடவடிக்கைகளை, அந்த 3 பேரும் கவனிக்கத் தொடங்கினர். அப்போது, பணத்தை வாங்கி முடித்த பிறகு, நள்ளிரவு நேரத்தில் அவர் வீட்டிற்குக் கிளம்பும் போது, அவர் மீண்டும் உடைகளை மாற்றி இயல்பான மனிதானக மாறி உள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த 3 திருநங்கைகளும், இது குறித்து ராஜேந்திராவிடம் சண்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது ராஜேந்திராவுக்கும், அந்த 3 திருநங்கைகளுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
இதில், கடும் ஆத்திரமடைந்த 3 திருநங்கைகளும் சேர்ந்து ராஜேந்திராவை பிடித்து சரமாரியாக அடித்துத் தாக்கி உள்ளனர். இதில், அவர் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த 3 பேரும், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், “அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்” என்று கூறி உள்ளனர்.
மேலும், “நீங்கள் யார்? என்று கேட்டுள்ளார். இதில், அவர்கள் சொன்ன பதில் திருப்தியாக இல்லாத நிலையில், மருத்துவமனை சார்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்த வந்த போலீசார், அந்த 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அவர்கள் 3 பேரும் சேர்ந்து தாக்கியதால், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த 3 பேரையும் கைது செய்து, போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.