அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வரும் மே 20 ஆம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. கடைசி நாளான இன்று உடற்கல்வி தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்பின் மாணவர்களுக்கு நாளை முதல் ஜூன் 12-ம் தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். கோடை விடுமுறையில் விருப்பப்படும் மாணவர்கள், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
மேலும் கடந்த மார்ச் 2-ம் தேதி 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன் படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. மே 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதே போல், 11-ம் வகுப்புக்கு மே 9-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது. மே 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கு மே 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றும் வரும் நிலையில், 30-ம் தேதியோடு முடிவடைகிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு முடிந்தாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வரும் 20 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளுக்காக பள்ளிகளுக்கு கட்டாயம் வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. ஆனால் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், வெளிநாடு செல்ல முன் அனுமதி பெற்றுள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் அதனைத்தொடர்ந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, 3-ம் பருவத் தேர்வு முடிவுகள் வரும் 31-ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆசிரியர்கள் 20-ம் தேதிக்குப் பின் மீண்டும் எப்போது பள்ளிக்கு வர வேண்டும் என்பது குறித்தும் விடுமுறை நாட்கள் குறித்தும் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.