பிறந்தநாளன்று, தலைவர்களின் வாழ்த்துகளால் நிறைந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்!
By Madhalai Aron | Galatta | Oct 01, 2020, 07:29 pm
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி தொடங்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என அனைத்து தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்டு சொல்லும்படியாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளையொட்டி மலர்க்கொத்துடன் முதலமைச்சர் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
அதில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டிற்கு மேலும் சேவையாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பிறந்தநாளுக்கு உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில், “ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது மிகுந்த நுண்ணறிவும், கொள்கை விஷயங்களைப் பற்றிய புத்திசாலித்தனமான புரிதலும் நம் தேசத்திற்கு பெரும் சொத்து. பாதிக்கப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகவும் இரக்கமுள்ளவர். அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். இதையடுத்து வேளாண் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல தேசிய கல்வி கொள்கைக்கும் தனது ஆதரவை அவர் தெரிவித்திருந்தார். இதுபற்றி அவர் பேசும்போது, ``21வது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி நடைமுறையில் மறுசீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது, பங்கேற்பு மற்றும் செம்மையாக்கல் மூலம் இந்த நிலையை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தரமான கல்வி அளிப்பதன் மூலம், சமநிலையிலான, துடிப்பு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கான லட்சியப் பாதையை இது வகுக்கிறது" என்று குறிப்பிட்டு கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
`உயர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துதல்' என்ற தலைப்பில் இன்று நடந்த பார்வயாளர்கள் மாநாட்டின் தொடக்க உரையில் அவர் இவ்வாறு கூறினார்.