“லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை மற்றும் இசை பயணம்” ஒரு முறை திரும்பி பார்க்கலாம்.. Special
கிட்டதட்ட அரை நூற்றாண்டாக தனது தேனிசைக் குரலால் ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் மிகிழ்வித்து வந்த இசை தென்றல் லதா மங்கேஷ்கர், இன்றைய தினம் நம்மை விட்டும், இந்த உலகை விட்டு விடைபெற்றுக்கொண்ட இந்த தருணத்தில், அவரின் வாழ்க்கை பயணத்தை ஒரு முறை திரும்பிப் பார்க்கலாம்..
கொரோனா என்னும் கொடிய நோய் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட இசை தென்றல், பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவருக்கு வயது 92 ஆகும்.
தமிழ், இந்தி என்று கிட்டதட்ட 36 மொழிகளில் பல ஆயிரக்கணாக்கான பாடல்களைப் பாடிய “மாபெரும் இசை மேதை” என்று, சொன்னாலும் அது தகும்.
இப்படியான இசை தென்றல் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தான், “பாடகி லதா மங்கேஷ்கரின் உடலுக்கு இறுதி சடங்கானது, அரசு மரியாதையோடு நடத்தப்படும்” என்று, மராட்டிய மாநில அறிவித்து உள்ளது.
அதன் படி, மும்பை சிவாஜி பூங்காவில் மாலை 6.30 மணிக்கு அம்மாநில அரசு சார்பில், இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
குறிப்பாக, பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவை தொடர்ந்து, “2 நாள் தேசிய துக்கமாக அனுசரிக்கப்படுவதாக” மத்திய அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி, இந்தியா முழுவதும் இன்று முதல் 2 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.
பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் தனது வாழ்க்கை பயணம் எப்படிப்பட்டது என்றால்,
- இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் என்னும் ஊரில் கடந்த1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று பிறந்தார்.
- லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிக்கல் பாடகர் மற்றம் நாடக கலைஞர்.
- தனது ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கினார் லதா மங்கேஷ்கர்.
- புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப் பயிற்சி பெற்றார்.
- லதா மங்கேஷ்கர் தனது 13 வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார்.
- முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார்.
- அதன் பிறகு, “மகால்”, ”அந்தாஸ்”, ”பர்சாத்”, ”துலாரி” போன்ற படங்களில் பாடியதால், அதன் மூலமாக இந்தியா முழுவதும் பெரும் புகழை அடைந்தார்.
- 1942 ஆம் அண்டு முதல் சினிமா துறையில் பாடத் தொடங்கினார்.
- 1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” பெற்றார்.
- 1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
- 1974 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
- 1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
- 1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” பெற்றார்.
- 1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
- 1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.
- 1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.
- 1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது பெற்றார்.
- 1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” பெற்றார்.
- 1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது பெற்றார்.
- 2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” பெற்றார்.
- 2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” பெற்றார்.
- 2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” பெற்றார்.
இதனிடையே, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து இந்திய அணி வீரர்கள் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.