மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததால்.. “கார் ஏற்றி கொல்லப்பட்ட லக்கிம்பூர் சாட்சிகள் மிரட்டப்படுகிறார்களா?”
உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால், கார் ஏற்றி கொல்லப்பட்ட லக்கிம்பூர் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள் என்கிற குற்றம்சாட்டும் தற்போது எழுந்துள்ளதால், “சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று, உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அன்று விவசாயிகள் நடத்திய பேரணியின் போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 அப்பாவி விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையத்து, அங்கு நடைபெற்ற கலவரத்தையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் வரை உயிரிழந்தனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் யாவும் தொடர்ந்து மிக கடுமையாக குரல் கொடுத்த நிலையில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனாலும், “இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பாஜக தலைமையிலான மத்திய அரசு எதுவும் செய்யவில்லை” என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் மத்திய அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்னதாக ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் சுதந்திரமாக வெளியில் தான் இருந்து வருகிறார்.
எனினும், ஆசிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று விசாரணை செய்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, “உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து உள்ளதால், கார் ஏற்றி கொல்லப்பட்ட லக்கிம்பூர் கொலை வழக்கில் அப்பாவி சாட்சிகள் மிரட்டல்களுக்கு ஆளாகிறார்கள்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
மேலும், “உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்து இருப்பதால், அங்கு இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது” என்கிற வாதத்தையும் அவர் முன்வைத்தார்.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, “இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக ஆசிஸ் மிஸ்ரா மற்றும் உத்தரப் பிரதேச அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று, உத்தரவிட்டு உள்ளது.
அத்துடன், “இந்த வழக்கின் சாட்சியங்களை உச்ச நீதிமன்றம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்றும், அந்த வகையில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றும், நீதிபதிகள் அமர்வு அதிரடியாக உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் மறு விசாரணையானது வரும் மே மாதம் 24 ஆம் தேதிக்கு, நீதிபதிகள் ஒத்தி வைத்து உள்ளனர். இதனால், இந்த வழக்கில் சம்மப்பட்ட சாட்சிகளை பாதுகாக்க குறிப்பிட்ட அந்த பகுதியின் விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.