கடந்த மாதம் இறுதியில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
கட்சியின் துணைத் தலைவர்கள், தேசியச் செயலாளர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.
தேசியச் செயலாளர் பதவியில் இருந்துவந்த ஹெச்.ராஜா அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம் பெறாதது தனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தால் அவரை தான் வரவேற்பதாக கூறியிருந்தார் எல்.முருகன். திமுகவில் இருந்து விலகி 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவுக்கு அக்கட்சி சார்பில் அவர் எதிர்பார்த்ததாக கூறப்படும் எம்.எல்.ஏ., எம்.பி. சீட்டுகள் தற்போது வரை வழங்கப்படவில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இதனால்தான் அதிருப்தியில் இருந்து வந்த குஷ்பு உள்ளுர் அரசியல் மத்திய அரசியலிலும் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார்.எனவே குஷ்பு பாஜகவில் சேர தயாராக இருப்பதாகவும் அவரை எப்படியாவது பாஜக பக்கம் இழுக்க வேண்டும் என்று தமிழக பாஜக முயல்வதாகவும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
முன்னதாக, பாஜகவுக்கு ஏதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்த குஷ்பு, தற்சமயம் வேளாண் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்க்காமல் அமைதி காத்துவருகிறார். சமீபத்தில் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடிய குஷ்புக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக எதிர்த்த நிலையில், அதற்கு வரவேற்பு தெரிவித்திருந்தார் குஷ்பு. இதனால் அவர் பாஜகவில் இணையப்போகிறார் என்ற தகவல் உலா வரத் தொடங்கியது.
இந்த நிலையில் தான் பாஜகவில் இணையப்போகிறேன் என்ற தகவல் குப்பையான யூகம் என்று சாடியுள்ள குஷ்பு, ``நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக இன்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு குஷ்பு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒவ்வொரு சில மாதங்களும் நான் குறிப்பிட்ட ஒரு கட்சியிலோ அல்லது வேறு கட்சிகளிலோ இணையப்போவதாக செய்திகள் வருகின்றன. இந்த அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. 2014ஆம் ஆண்டிலிருந்தே நான் பாஜகவில் இணையப்போகிறேன் என்ற வதந்திகள் வருவதும், பிறகு தானாக அடங்கிவிடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் நடந்த ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை கொடூரச் செயலுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில், குஷ்புவும் கலந்துகொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். ``நான் பாஜகவில் இணையப்போகிறேன் என்பது உண்மையென்றால், நான் எப்படி பாஜகவிற்கு எதிரான அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து நடக்கும் பேரணியில் கலந்துகொள்வேன்” என குஷ்பு கேள்வியும் எழுப்பினார். இதன் மூலம் தான் பாஜகவில் இணையப்போவதாக வந்த வதந்திகளுக்கு தெளிவாகவே விளக்கம் அளித்துவிட்டார் குஷ்பு